லிமா: பெரு நாட்டில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் நடந்து சென்ற வீரர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென் அமெரிக்க நாடான பெருவின் ஹுவான்காயோவில் நேற்று முன்தினம் இரு அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு இடையே மழை பெய்ய துவங்கியது. சில நிமிடங்களில் மழை அதிகமானதால், நடுவர் போட்டியை பாதியிலேயே நிறுத்தினார். வீரர்கள் அனைவரையும் மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினார்.
இதையடுத்து வீரர்கள் அனைவரும் வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது ஜோஸ் ஹூகோ டிலா குரூஸ் மேசா, 39. என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது.
அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் அருகே நடந்து வந்த கோல் கீப்பர் ஜுவான் சோக்கா கடுமையான தீக்காயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
மேலும், மின்னல் தாக்கிய வீரருக்கு சற்று தொலைவில் நடந்து சென்றவர்களும் மின் அதிர்ச்சிக்கு ஆளாகி ஒரே சமயத்தில் தரையில் விழுந்தனர். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் எழுந்தனர்.
அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.