தற்காப்பு அமைச்சர் நீக்கம்; இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம் வெடித்தது

டெல் அவிவ்:

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நாட்டின் தற்காப்பு அமைச்சரான யோவ் கேலண்ட்டை பதவியிலிருந்து நீக்கியதால் அங்கு ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

அண்மைய மாதங்களாக கேலன்ட் மீதான நம்பிக்கை நெட்டயன்யாகுவுக்கு குறைந்து விட்டதாகவும், வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அவருக்குப் பதிலாக பொறுப்பு ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் “தாங்கக்கூடிய” வலியுடன் சில சலுகைகளை ஒப்புக்கொண்டால் எஞ்சிய பிணைக்கைதிகளை மீட்க முடியும் உட்பட மூன்று விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கேலன்ட் கூறினார்.

இதற்கிடையே இஸ்ரேல் சாலைகளில் திரு கேலண்ட் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தற்காப்பு அமைச்சரான யோவ் கேலண்ட், பிணைக்கைதிகள் உயிருடன் இருக்கும்போதே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயத்தில் தகுந்த வயதுடைய அனைத்து இஸ்ரேலியர்களும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் கேலண்டுக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

குறிப்பாக பாலஸ்தீன போராளி குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் பதிலடித் தருவதில் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இதையடுத்து கேலண்டை, பிரதமர் நெட்டன்யாகு நவம்பர் 5ஆம் தேதி பதவியிலிருந்து நீக்கினார்.

முன்னாள் ஜெனரலான கேலண்ட் காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரை வடிவமைத்தவர். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகும் 65 வயதான கேலண்ட், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றப் போவதாக சூளுரைத்தார்.

“இது, என்னுடைய வாழ்க்கையின் ஓர் அங்கம்,” என்று எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஹமாஸால் கடத்தப்பட்ட எங்கள் மகன்களையும் மகள்களையும் திரும்பக் கொண்டுவர இஸ்ரேலுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது,” என்றார் அவர்.

“பிணைக் கைதிகளை மீட்டுக்கொண்டு வருவது சாத்தியம். ஆனால் அது வலியை ஏற்படுத்தும் பல்வேறு சமரசங்களை உள்ளடக்கியது. இந்த சமரசங்களை எப்படித் தாக்குப்பிடிப்பது என்பது இஸ்ரேலிய அரசாங்கத்துக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.

ஓராண்டிற்கும் மேலாக நடந்த சண்டையில் வீரர்கள் சோர்வடைந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள வேளையில், இஸ்ரேலிய ராணுவச் சேவை பிரச்சினைகளை கேலண்ட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

“அனைவரும் ராணுவத்துக்கு சேவையாற்ற வேண்டும். இஸ்ரேலைப் பாதுகாக்கும் பணியில் ஒன்றாக ஈடுபட வேண்டும்,” என்று கேலண்ட் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here