‘அமரன்’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

சென்னை,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் முதல் 7 நாட்களில் உலகளவில் ரூ.168 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ‘அமரன்’ சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக அமைந்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.200 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான், அண்ணாமலை, ரஜினி, சிவகுமார், சூர்யா, ஜோதிகா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எஸ்.ஜே.சூர்யா என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பில் அமரன் படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here