சிறுமியின் எலும்புக்கூடு 18 ஆண்டுக்கு பின் அடக்கம்

குடகு: குடகு, மடிகேரியின், அய்யங்கேரி கிராமத்தில் வசிப்பவர் மொய்து. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன், இவரது மூத்த மகள் சபியா, 13, கேரளா, காசர்கோடுவில் வசிக்கும் ஹம்ஜா என்பவரின் வீட்டில், வீட்டு வேலை செய்து கொண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சிறுமி திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போய் மூன்று மாதங்களாகியும், ஹம்சா குடும்பத்தினர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கூறவில்லை. மகள் காணாமல் போனதை அறிந்த பெற்றோர், அய்யங்கேரி கிராமத்தினர், காசர்கோடுவின் சில தொண்டு அமைப்புகள், ஹம்ஜாவை கைது செய்யும்படி தொடர்ந்து 86 நாட்களாக போரட்டம் நடத்தினர்.

 

இதன் பலனாக, காசர்கோடு போலீஸார், ஹம்ஜா, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் சபியாவை கொலை செய்து, கோவாவின் அணை ஒன்றின் அருகில் புதைத்தது தெரிந்தது. 2008ல் கோவாவில் சிறுமியின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் விசாரணையை முடித்து, கேரள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் குற்றம் உறுதியானதால், இவர்களுக்கு நீதிமன்றம் 2019ல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை கேரள உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையாக மாற்றியது.

ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் எலும்பு கூடு நீதிமன்றம் வசம் இருந்தது. அதை தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், இம்மாதம் 6ம் தேதி, சபியாவின் எலும்பு கூடு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சாஸ்திரப்படி அடக்கம் செய்தனர்.

சிறுமியின் பெற்றோர் கூறியதாவது:எங்கள் மகளுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு, நீதிமன்றம் சரியான தண்டனை விதித்தது, ஒன்றும் அறியாத சபியாவை எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. 18 ஆண்டுகளுக்கு பின், எங்கள் மகளை எலும்பு கூடாக பார்த்தது, எங்களுக்கு மனவலியை அளித்துள்ளது.இவ்வாறு அவர்கள்கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here