இணையதளப் பகடிவதை : நெருங்கிய குடும்ப உறுப்பினரும் புகார் செய்யலாம்

இணையதளப் பகடிவதையால் ஒருவர் மனோரீதியில் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் சம்பந்தப்பட்டவரின் சார்பாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுள் யாராவது ஒருவர் எம்சிஎம்சி எனப்படும் மலேசியத்தகவல் பல்லூடக ஆணையத்திலோ போலீசிலோ புகார் செய்யலாம் என்று எம்சிஎம்சி அமலாக்கப் பிரிவுத் தலைமை அதிகாரி புவான் இனேங் ஃபரிடா இஸ்கண்டார் தெரிவித்தார்.

இப்போது புறையோடிப் போயிருக்கும் இணையதளப் பகடிவதைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்பினரின் கரங்களும் ஒன்றிணைய வேண்டும். பெற்றோர் முதல் இணைய பயனீட்டாளர் வரை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புமிக்கவர்களாக இருந்தால் ஓரளவு தீர்வு கண்டுவிடலாம்.

இணையத்தில் வன்மம்,  ஆபாசம், மற்றவரின் மனத்தைக் காயப்படுத்தும் உள்ளடக்கம், வார்த்தைகள் இருந்தால் அதன் பயனீட்டாளர்கள் பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் தரப்பினரிடம் புகார் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எம்சிஎம்சி-இல் கடந்த 25 ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து தற்போது அதன் அமலாக்கப் பிரிவுத் தலைமை அதிகாரியாகப் பணிபுரியும் புவான் இனேங் ஃபரிடா, தொடர்பு. பல்லூடகச் சட்டம் பிரிவு 233 கீழ் அனைத்துப் விசாரணைகளுக்கும் தாம் பெறுப்பேற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மற்ற இலாகாக்களில் இருந்து பெறப்படும் புகார்களையும் விசாரணை அறிக்கைகளையும் முறையாக ஆய்வு செய்து ஒரு மதிப்பீட்டிற்குப் பிறகு குற்ற அம்சங்கள் இருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டரிடம் (டிபிபி) அறிக்கை சமர்ப்பிப்பதும் தம்முடைய கடமைகளுள் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

எம்சிஎம்சி புகார் போர்ட்டல் வழி பெறப்படும் பொதுமக்களின் புகார்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு என்னுடைய பார்வைக்குக் கொண்டு வரப்படும். இதில் சட்டவிதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றனவா? அவற்றைப் புலன்  விசாரணை செய்வதற்கு எது சிறந்த வழி என்பதை என்னுடைய இலாகா முறையாக ஆய்வு செய்யும்.

அதன்அடிப்படையில் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதா அல்லது அபராதம் விதிப்பதா என்பதை முடிவு செய்வதற்கு டிபிபி அலுவலகத்தில் புலன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று புவான் இனேங் ஃபரிடா கூறினார்.

ஒரு வழக்கு வெற்றி பெறுவது அல்லது தோல்வியுறுவது தம்முடைய அதிகாரிகள் திரட்டித்தரும் ஆதாரங்களைப் பொறுத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு சாதாரண பணியல்ல, மன அழுத்தத்தைத் தரக்கூடிய பணி என்று சொன்னார்.

எங்களுடைய பொறுப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எவ்வாறு அவற்றின் பயனீட்டாளர்களை நடத்துகின்றன என்பதைக் கண்காணிப்பது எங்கள் பணியல்ல. மேலும் தொலைக்காட்சிகளில் என்ன ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதும் எங்கள் பணியல்ல. இண்டர்நெட் களம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதும் எங்கள் கடமைகளில் அடங்கி இருக்கவில்லை.

ஆனால் இவற்றில் இடம்பெறும் உள்ளடக்கங்கள் மிரட்டல் தரக்கூடிய அம்சங்கள், சமூக ஊடகங்கள் வாட்ஸ்அப் போன்ற தகவல் அளிப்புச் சேவைகள், நெட்பிளிக்ஸ் போன்றவற்றில் இடம்பெறும் உள்ளடக்கங்கள், தகவல்கள் போன்றவை தொடர்பில் கிடைக்கப்பெறும் புகார்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் அறிக்கை சமர்ப்பிப்பது என்னுடைய இலாகாவின் பணிகளில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய நிலையில் இண்டர்நெட் பயன்பாடு என்பது 100 விழுக்காடு அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் பணியில் மிக அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இங்கு பல்நோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேசமயத்தில் டிக் டாக். இன்ஸ்டாகிராம். ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொருநாளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்வழி ஒருவரைக் காயப்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள், தகவல்கள் பல்வேறு களங்களில் இருந்து வந்து சேரலாம். ஒவ்வொரு முனையிலிருந்தும் தான் தாக்கப்படும் உணர்வை ஒருவர் பெறலாம். இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது ? ஒருவரை அந்தத் துன்பத்தில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பதுதான் எங்களுடைய முதன்மைக் கடமையாக அல்லது சிந்தனையாக இருக்கிறது.

டிக் டாக். டெலிகிராம் போன்ற தளங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆன்லைன் சூதாட்டம், விபச்சாரம், ஆபாசப் படங்கள், போதைப்பொருள் விற்பனை போன்றவை இடம்பெறுகின்றன என்ற புகார்களும் நாளுக்கு நாள் கிடைக்கப் பெற்றுத்தான் வருகின்றன.

இந்தக் குற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் அடிப்படையில்தான் அவற்றின் பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவை யாவும் போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட குற்றச்செயல்களாகும். கள்ளத்தனமாகத் திரைப்படங்களைப் பகிர்வது பதிப்புரிமைக்கு உட்பட்டதாகும். உள்நாட்டு வாணிப,  பயனீட்டாளர் அமைச்சின் கீழ் இந்தக் குற்றச்செயல் கண்காணிக்கப்படுகிறது.

எம்சிஎம்சியைப் பொறுத்தவரை தகவல் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 கீழ் அபாயகரமான, ஆபாசமான, அநாகரிகமான, பொய்யான தகவல்கள் போன்றவற்றைத் தம்முடைய இலாகா புலன் விசாரணை செய்யும். அதேசமயத்தில் ஒருவரின் மனத்தைக் காயப்படுத்த வேண்டும், தொந்தரவு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இடம்பெறும் உள்ளடக்கங்களையும் தகவல்களையும் எம்சிஎம்சி புலன் விசாரணை செய்யும் என்பதையும் இனேங் ஃபரிடா சுட்டிக்காட்டினார்.

இணையதளப் பகடிவதை என்பது பல்வேறு ரூபங்களில் நிகழ்கின்றன. இது ஒவ்வோர் இனத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. இந்திய சமுதாயத்தைப் பாதிக்கக்கூடிய சில குற்ற அம்சங்கள் மற்ற இனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாததாக இருக்கலாம். இவை யாவும் சவால்மிக்கதுதான். குற்றச்செயல் அம்சங்கள் மிக அதிகமாக இருக்கிறது.

2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இணையதளப் பகடிவதை தொடர்பில் 564 புகார்கள் புலன் விசாரணை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுள் 150 புகார்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குற்ற அம்சங்கள் சார்ந்த சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் 24 சம்பவங்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவர் 27 நாட்களுக்கும் மற்றொருவர் 6 மாதங்களுக்குமான சிறைத்தண்டனையைப் பெற்றனர் என்று இனேங் ஃபரிடா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here