நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத் துறைமுகத்திலிருந்து இலங்கைக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
முதலில் தினமும் இயங்கி வந்த அந்தக் கப்பல் சேவை போதுமான பயணிகள் இல்லாத காரணத்தால் வாரத்துக்கு மூன்று நாள்களில் வழங்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சேவை வழங்கப்பட்டது.
இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் கப்பல் சேவை செயல்பட்டு வந்தது.
பின்னர், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இம்மாதம் எட்டாம் தேதி முதல் வாரந்தோறும் ஐந்து நாள்களுக்குச் சேவை இயக்கப்பட்டது.
இந்தச் சூழலில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என வானிலை நிலையம் அறிவித்திருந்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கைக்கான சவங்கங்ணை பயணிகள் கப்பல் சேவை சனிக்கிழமையன்று (நவம்பர் 16) நிறுத்தப்பட்டது.
சேவையை வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் தொடங்க கப்பல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தச் சேவையில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அவை பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டது.