கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது விலைவாசி வானை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள நகரவாசிகளின் வாழ்க்கை செலவினத்தை கேட்டால் நம் தலையே சுற்றும் அளவிற்கு செலவுகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.
பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு RM5,188 முதல் RM6,490 வரை தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது, என்று மலேசியப் புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.
இந்த தரவுகள் மலேசியப் புள்ளியியல் துறையால் (DOSM உருவாக்கப்பட்ட ஒழுக்கமான வாழ்க்கைக்கான அடிப்படைச் செலவுக்கான (PAKW) கணக்கீட்டு முறையின்படி எடுக்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஜோகூர் பாரு, சிரம்பான், குவாந்தன் மற்றும் கூச்சிங் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் சில மாதத்திற்கு RM6,000 ஐ விட அதிகமான மாதாந்திர PAKW விகிதங்களைப் பதிவு செய்திருந்தன.
DOSM அறிக்கையின்படி, 2023 இல் மலேசியாவில் உள்ள குடும்பங்களுக்கான (3 முதல் 8 பேர் கொண்ட குடும்பம்) சராசரி மாதாந்திர PAKW RM4,729 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
DOSM இன் MyPAKW இயங்குதள தரவுகளின் அடிப்படையில் சிலாங்கூரின் பெட்டாலிங் முதலிடத்தில் உள்ளது, இங்கு வசிப்போருக்கு மாதத்திற்கு RM6,490 தேவைப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் (RM6,346), ஜோகூர் பாரு (RM6,003), கிள்ளான் (RM5,960), மலாக்கா (RM5,768), மற்றும் கோம்பாக் (RM5,625) ஆகிய நகரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.