சரவாக் மாநிலத்தில் கியாஸ் எடுக்கும் பணி மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் பெட்ரோனாஸ்– சரவாக் இடையிலான பேச்சுவார்த்தைகள் நிதானமாகவும் பொறுமையாகவும் நடத்தப்பட வேண்டும். உடன்பாடு காணப்படாவிடில் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் மிகப் பெரிய இழப்புகளைக் கொண்டு வருவது நிதர்சனம்.
இரண்டாவதாக அப்படியே எண்ணெய், கியாஸ் எடுப்பதற்கு பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட் (பெட்ரோஸ்) நியமனம் செய்யப்படுமாயின் இத்துறையில் ஈடுபட்டுள்ள மிகப் பெரிய தொழில் துறைகளுடன் அல்லது நிறுவனங்களுடன் பெட்ரோனாஸைப் போன்று நியாயமாகப் பேரம் பேசும் பலத்தை அது கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.
எண்ணெய்– கியாஸ் உற்பத்தியில் சரவாக் நாட்டின் எண்ணெய் வளத்தில் மிகப் பெரிய பங்கினை வழங்கி வருகிறது. ஆனால், தங்களுக்குச் சேர வேண்டிய பங்கு நியாயமாக இல்லை என்பது சரவாக்கின் வாதமாக இருந்து வருகிறது.
நாட்டின் மொத்த எண்ணெய் வளங்களில் 60.87 விழுக்காடு சரவாக்கில் கிடைக்கப் பெறுகிறது என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. அதே சமயத்தில் மலேசியாவின் மொத்த இயற்கை கியாஸ் ஏற்றுமதியும் கிட்டத்தட்ட 90 விழுக்காடு சரவாக்கில் கிடைக்கப் பெறுகிறது.
இருப்பினும், நாட்டின் மொத்த எண்ணெய் வருமானத்தில் 5 விழுக்காடு மட்டுமே சரவாக் ராயல்டியாக பெறுகிறது. கடந்த ஆண்டில் 2.8 மில்லியன் ரிங்கிட் அளவிலான ராயல்டியை சரவாக் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் சரவாக்கின் ஏகபோக கியாஸ் எடுக்கும் பணி பெட்ரோஸிடம் ஒப்படைக்கப்படுமாயின் அது அம்மாநிலத்திற்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி விநியோகம், ஏற்றுமதி ஒதுக்கீடு, விலை நிர்ணயிப்பு ஆகியவற்றை முறைப்படுத்துவதிலும் பெட்ரோஸ் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். இவற்றைப் பராமரித்து கியாஸ் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் மிகப் பெரிய பணியை பெட்ரோனாஸ் தற்போது ஏற்றுள்ளது.
பெட்ரோனாஸ் இடத்தை பெட்ரோஸ் நிரப்ப முடியாது. முதலீட்டாளராக பெட்ரோஸ் தாக்குப்பிடிக்க முடியாது. இது சரவாக்கின் எண்ணெய், கியாஸ் துறைக்கு மிக மோசமான எதிர்மறை தாக்கங்களை, பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோனாஸ் செலவிட வேண்டிய மூலதன செலவுகளை பெட்ரோஸ் ஏற்க வேண்டும் என்பது தம்முடைய பெயரைக் குறிப்பிடவிரும்பாத ஓர் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெட்ரோனாஸ் செலவிடும் அதே தொகையை பெட்ரோஸ் செலவிடும் ஆற்றலைக் கொண்டிருக்காவிடில் சரவாக்கின் எண்ணெய்– கியாஸ் துறை படுதோல்வி காணும்.
இது ஒரு நியாயமான மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் சரவாக்கில் மூலதனச் செலவுகளை பெட்ரோனாஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். இதற்கு நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
2023ஆம் ஆண்டில் மட்டும் சரவாக் உட்பட மலேசியா எண்ணெய், கியாஸ் துறையில் பெட்ரோனாஸ் 26 பில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்திருக்கிறது.
வருமானங்கள், முதலீடு மீதான தாக்கம்
தன்னுடைய கட்டுப்பாட்டை பெட்ரோனாஸ் பெட்ரோஸிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் பெட்ரோஸ் மட்டுமன்றி பெட்ரோனாஸும் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரும் என்று ஆய்வு மையங்கள் ஒப்புக் கொள்கின்றன.
இதனால் பெட்ரோஸிடம் பெட்ரோனாஸ் அதன் பொறுப்பை ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படுமாயின் அந்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஆணி வேரே ஆட்டங்கண்டுவிடும். குறிப்பாக சரவாக்கிற்கு ஆண்டு லாபத்தில் 20 பில்லியன் ரிங்கிட்டை பெட்ரோனாஸ் வழங்கி வருகிறது. இது சரவாக்கில் கியாஸ் உற்பத்தியிலிருந்து கிடைக்கப் பெறும் லாபம் மட்டுமே இத்தொகை வழங்கப்படுகிறது.
இது தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எதிர்கால மூலதனச் செலவுகளை வெகுவாகக் குறைத்துவிடும். குறிப்பாக, நாடு முழுவதுள்ள கியாஸ் உற்பத்தி, நடவடிக்கைகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஆய்வு மையங்கள் கருத்துரைக்கின்றன.
பெட்ரோனாஸின் நடவடிக்கைகள் அனைத்தும் கடற்பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய், கியாஸ் தொழில்துறையில் கடல்பகுதி நடவடிக்கைகள் பொதுவாகவே மிக அதிகமான செலவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். எண்ணெய் தோண்டுதல், உற்பத்தி ஆகியவற்றுக்கு பெருந்தொகையை செலவிட வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, தென்சீனக் கடல்பகுதியில் இது ஒரு மிகப் பெரிய சவால். பருவ நிலை மாற்றங்கள், கடலின் ஆழம், அப்பகுதியில் சில தீவுகளுக்கு உரிமை கொண்டாடி சீனாவின் போர்க்கப்பல்கள் அவ்வப்போது அந்த எல்லைக்குள் அத்துமீறி நுழைவது பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவை யாவும் எண்ணெய் தோண்டுதல் நடவடிக்கைகளில் மிகப் பெரிய சவால்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
இந்தச் சவால்களுக்குத் தீர்வு காணப்படாவிடில் சரவாக்கும் பெட்ரோனாஸும் இந்தோனேசியாவிடம் தோல்வி காண வேண்டியிருக்கும். போதுமான அளவில் யாரும் செலவு செய்யவில்லை. அல்லது சரியான பாதையில் செலவு செய்யவில்லை என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டார். இது மிகவும் சோகமான பகுதியாகும். இவ்வாறு ஒரு மாபெரும் இழப்பைக் காண்பதற்கு மலேசியர்களாகிய நாங்கள் தயாராக இல்லை.
அனைத்துலக நிலைப்பாடு
சரவாக்கின் இந்த உரிமை கோரல் மீது கருத்துரைத்த பெட்ரோனாஸின் முதல் தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா, பெட்ரோனாஸ் போன்று பெட்ரோஸ் ஆகிவிட முடியாது என்று மிக அழுத்தமாகக் கூறினார்.
இந்தச் சிந்தனையில் உள்ள பத்து நிறுவனங்களை நீங்கள் கொண்டிருக்கலாம். ஆனால், அவை எதுவுமே பெட்ரோனாஸிற்கு ஈடாக இருக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டினார்.
மலேசியர்கள் சார்பில் பெட்ரோனாஸ் அந்த எண்ணெயை அதன் வசம் வைத்திருக்கிறது. இது 1974 பெட்ரோலியம் மேம்பாட்டுச் சட்டத்தில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் கீழ் எண்ணெய், கியாஸ் துறை தேசிய மயமாக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரே நிறுவனத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஏழு சகோதரிகளுடன் இவ்விவகாரத்தைக் கையாளும்போது மலேசியா அதன் நியாயமான பங்கினைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் இந்தச் சட்டம் வகுக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டுகளில் எண்ணெய், கியாஸ் உற்பத்தியில் அதிசக்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த ஏழு சகோதரிகளில் ஷெல், எக்சோன் ஆகியவை உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக அந்தச் சமயத்தில் இருந்தன.
இந்நிலையில் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் மட்டுமே கூட்டரசு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருந்தது. இதன் வழி இந்த ஜாம்பவான்களை சமாளிக்கக்கூடிய வகையில் பெட்ரோனாஸ் பலம் பெற்றிருந்தது என்று தெங்கு ரஸாலி கூறினார்.
பெட்ரோனாஸும் நானும் ஷெல் அல்லது எக்சோன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியும். உரிய அங்கீகாரத்தையும் பெற முடியும். சம பங்கு குறித்து பேசவும் முடியும். ஆனால், இதனை பெட்ரோஸால் செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோனாஸ் இடத்தில் பெட்ரோஸை நியமனம் செய்தால் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் சரவாக்கின் நிலைப்பாட்டை பலவீனமடையச் செய்யும் என்று அவர் சொன்னார்.
நீதிப் போராட்டம்
இதன்மூலம் தன்னுடைய எல்லைப் பகுதியில் எடுக்கப்படும் எண்ணெய், கியாஸுக்கு சரவாக்கிற்கு மிக அதிக இழப்பீட்டை வழங்குவதற்கு வகை செய்யப்படும்.
உள்ளூர் தேவைகளைச் சமாளிப்பதற்கு தற்போது இயற்கை கியாஸுக்கு வழங்கப்படும் 5 விழுக்காட்டு ராயல்டி 30 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என்று சரவாக் கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக சரவாக் பெற்று வரும் மிக அதிகமான பலன்களை சரவாக்கின் இந்தக் கோரிக்கை முழுமையாகப் பார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று தெங்கு ரஸாலி கூறினார்.
மத்திய அரசாங்கம் தற்காப்பு உட்பட பல்வேறு சேவைகளுக்கு பணம் கொடுத்து வருகிறது. தென்சீனக் கடல்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களிலிருந்து தன்னுடைய எண்ணெய், கியாஸ் வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சரவாக் அடிக்கடி கேட்டு வருகிறது. இந்தத் தற்காப்புச் செலவுகளையும் மத்திய அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த கால இழப்புகளை ஈடுகட்டும் வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே சரவாக் மேம்பாட்டு நிதியை மத்திய அரசாங்கம் அதிகரித்திருப்பதையும் தெங்கு ரஸாலி சுட்டிக் காட்டினார்.
12ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்காக சரவாக்கிற்கு மத்திய அரசாங்கம் மொத்தம் 4.8பில்லியன் ரிங்கிட்டை ஏற்கெனவே ஒதுக்கியிருக்கிறது. அதேசமயத்தில் 2025 பட்ஜெட்டின் கீழ் மேலும் 5.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை சரவாக் அரசாங்கம் பெறவிருக்கிறது.