தன்னுடைய எல்லைகளையும் வளங்களையும் பாதுகாப்பதற்கு ஒரு கூட்டாட்சி முறையே சிறந்தது என்று மூத்த தலைவர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, தெங்கு ரஸாலி ஹம்ஸா ஆகிய இருவரும் கருத்துரைத்தனர்.
சட்டப்பூர்வமான தொகுதிகளில் கட்டிக் காக்கப்படும் ஒற்றுமையே மலேசியாவின் உண்மையான பலமாக இருக்கிறது. இந்த ஒற்றுமையே மலேசியாவின் ஆணிவேராக இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கூட்டரசு மாநிலங்களுக்கு வலிமை தருகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி மாநிலமாக மிகுந்த வலிமையுடன் செயல்பட முடியாது. இதனால் தான் பல மாநிலங்களை ஒன்றாக இணைத்து ஒரு கூட்டரசை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
தங்களுடைய காலனித்துவ எல்லைகளில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராஜியத்தின் முக்கிய கவலையாக புதிதாக சுதந்திரம் பெற்ற மாநிலங்களின் நீண்ட கால பாதுகாப்பு விவகாரம் இருந்தது என்று முதல் நான்கு பிரதமர்களின் கீழ் அரசாங்கத்தில் பணியாற்றிய அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி சொன்னார்.
இதன் காரணமாகத்தான் அவர்கள் தனித் தனி மாநிலங்களை ஒன்றிணைத்து மலேசிய கூட்டரசை அமைத்தனர். ஏற்கெனவே கம்யூனிஸ்டு மிரட்டலுக்குட் பட்டிருந்த சரவாக்கில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறியது. சிங்கப்பூர் கம்யூனிஸ்டு மிரட்டலை எதிர்நோக்கியிருந்தது.
இந்த மாநிலங்களை ஒன்றாக இணைப்பதற்கு நாங்களும் பிரிட்டிஷ் ராஜியமும் ஏன் ஒப்புக் கொண்டோம் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பிலிப்பைன்ஸை. சேர்ந்த மக்காபகல் சபா மீது உரிமை கொண்டாடினார். இந்தோனேசியாவின் சுக்கார்னோ மலேசியாவை நொறுக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் என்று கூ லி என்று அழைக்கப்படும் தெங்கு ரஸாலி கூறினார்.
அதிபர் டியோஸ்டாடோ மக்காபகல் தலைமையிலான பிலிப்பைன்ஸ் சபா இறையாண்மையை கோரியது. மலேசியா கூட்டரசு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக மலேசியா உடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. 1969 ஆம் ஆண்டு வரை ராஜதந்திர உறவுகள் சீரடையவில்லை. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளை ஒன்றிணைப்பதற்கு மபிலிண்டோ கொள்கையை அவர் பரிந்துரைத்தார்.
அதிபர் சுக்கார்னோ அவரின் பங்காக 1963 முதல் 1966 வரை ‘Ganyang Malaysia’ (மலேசியாவை நொறுக்குவோம்) எனும் மோதல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இது பிரகடனப்படுத்தப்படாத போர் மேகமாகவே மலேசியா மீது முற்றுகையிட்டிருந்தது. இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்யும் நோக்கத்தை கொண்டிருந்தது. இந்த மோதல் போக்கு இந்தோனேசிய வான் குடை படையினர் பத்து பஹாட், மலாக்கா ஆகிய நகரங்களில் தரையிறங்கினர். எல்லை கடந்து சபா, சரவாக்கிற்குள் ஊடுருவினர்.
நடப்பு மிரட்டல்கள்
இப்போதும் மலேசியா அடிக்கடி பதற்றமான சூழ்நிலையை மலேசியா எதிர் நோக்கி வருகிறது. அமெரிக்கா – சீனா இடையிலான நீண்ட கால போட்டாப் போட்டியை தொடர்ந்து தலைதூக்கியிருக்கும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் தென் சீனக் கடல் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதும் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில் மலேசியா அதன் எல்லைகளையும் வளங்களையும் பாதுகாப்பதற்கு ஒரு கூட்டு அமைப்பாகவே செயல்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெங்கு ரஸாலி கூறினார்.
இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் நுசந்தாரா கிழக்கு போர்னியோவில் தான் அமைந்திருக்கிறது. இதன் வழி போர்னியோவில் இந்தோனேசியா இன்னும் கூடுதல் ஆதிக்கம் செய்யும் சாத்தியம் மேலோங்கி இருக்கிறது. அதன் பிறகு சபா, சரவாக்கில் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
எனவே ராணுவ, அரசியல் மிரட்டல்களுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு மலேசிய கூட்டாட்சி தான் என்று முன்னாள் நிதி அமைச்சரமான தெங்கு ரஸாலி தெரிவித்தார்.
சபா, சரவாக் பிரிவினை உணர்வுகள் பற்றி வாதித்த அவர், கூட்டரசில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களும் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டால் எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
தன்னுடைய புதிய கடற்படை, புதிய ஆகாயப்படை, அது இது என்று அனைத்தையும் கட்டி எழுப்புவதற்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை நினைத்துப் பாருங்கள். பசிபிக் கடலில் சீனாவும் அமெரிக்காவும் இருப்பதையும் மறந்து விடக்கூடாது.
தற்காப்பு செலவுகள்
சரவாக், பிந்துலுவில் புதிய கடற்படை, ஆகாயப்படை தளங்களை நிர்மாணிப்பதன் மூலம் கிழக்கு மலேசியாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் முன்னெடுப்புகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இருப்பினும் இந்த இரண்டு தளங்களையும் நிர்மாணிப்பதற்குரிய செலவுத் தொகையை அரசாங்கம் அறிவிக்கவில்லை. ஆனால் ராணுவ சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு மட்டும் பல கோடி ரிங்கிட் மட்டும் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. பிந்துலு கடற்படை தளம் தற்போது நிர்மாணிப்பில் இருந்து வரும் மலேசியாவின் லித்தோரல் போர் கப்பல் நங்கூரமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த போர் கப்பல்கள் ஒவ்வொன்றும் 800 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தேசிய தற்காப்பு என்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும். கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2025 பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் தற்காப்பு அமைச்சுக்கு 21.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியது. 2024 பட்ஜெட் ஒதுக்கீடோடு ஒப்பிடுகையில் இது 1.4 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும் என்று தெங்கு ரஸாலி சொன்னார்.
இருப்பினும் தேசிய பாதூகாப்பு செலவு திட்டங்களில் மத்திய அரசாங்கம் போதுமான முன்னுரிமையை தரவில்லை என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல்சார் நிபுணர் சலாவத்தி மாட் பசிர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
மற்ற நிபுணர்கள் புவியியல் அரசியல் ஆபத்துகள், இதர பாதுகாப்பு சவால்கள் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு தன்னுடைய பழங்கால ராணுவ தளவாடங்களை மலேசியா துரிதமாக நவீனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் அதேசமயத்தில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியம் இருப்பதையும் இன்னொரு தரப்பு சுட்டிக்காட்டி இருக்கிறத.
வருமானம் மீதான கோரிக்கை
இவற்றுக்கு அப்பால் அண்மைய காலமாக சில மாநிலங்கள் தேசிய வருமானத்தில் இருந்து கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் என கோரி வருகின்றன.
இவ்வாண்டு தொடக்கத்தில் பினாங்கு, ஜோகூர் மாநில அரசாங்கங்கள் தங்களது மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் மத்திய அரசாங்க வருமானத்தில் இருந்து 20 விழுக்காட்டை திரும்பக் கோருவதற்கு விருப்பம் தெரிவித்தன. அதே சமயத்தில் கிளந்தான், திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் எண்ணெய் வருமானத்தில் இருந்து இன்னும் அதிகமான ராயல்டி கேட்டு வருகின்றன.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட சிறப்பு மானியம் பெறுவதற்கு தன்னுடைய மாநில சட்டத்தை பயன்படுத்தி சபா சட்ட சங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோனாசிடம் இருந்து நியாமான பங்கு வேண்டும் என்று கோரி சரவாக்கும் இதே பாணியை பின்பற்றி இருக்கிறது. சரவாக் நீர்ப்பகுதியில் இருந்து பெட்ரோனாஸ் அதன் 90 விழுக்காட்டு திரவ இயற்கை கியாஸை எடுக்கிறது.
தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் கூட்டரசில் இருந்து வெளியேறுவதற்கு தயங்கப்போவதில்லை என்றும் சரவாக் அறிவித்திருக்கிறது. சபாவிலும் இதே உணர்வு மேலோங்கி இருக்கிறது.
இது சில ‘ தீவிரவாதிகளின் தூண்டுதல் ‘ என்று குறிப்பிட்ட துன் மகாதீர், கூட்டரசை தொடர்ந்து நிலை நிறுத்தி வலுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கப்போக்கை காண்பதற்குரிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.