திருமண நாளில் மணப்பெண்ணுக்கு கத்திக்குத்து- படுகாயத்துடன் மணமகனை கரம்பிடித்தார்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த இளம்பெண் ஷிவானி. இவருக்கும், உத்தம் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக முசாபர்நகர் டெல்லி-டேக்ராடூன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமணத்துக்காக தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.மணமகள் ஷிவானி, புத்தம் புது பட்டுச்சேலை, தங்க நகைகளுடன் எதிர்கால கனவுகளையும் அணிந்து மணக்கோலத்தில் திருமணம் நடைபெற இருந்த ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது எங்கிருந்தோ வந்த வாலிபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஷிவானியை சரமாரியாக குத்தினார். இதில் மணமகள் கழுத்து மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்தார்.
சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தையே பரபரப்பாக்கியது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். இந்த சந்தடியில் அந்த வாலிபரும் அங்கிருந்து வெளியேறினார்.

படுகாயம் அடைந்த மணமகள் ஷிவானியை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து இல்லை என்ற டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியிலேயே கத்திக்குத்து காயங்களுடன் மணமகள் ஷிவானி, உத்தமின் கரம்பற்றினார்.

இதனிடையே இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மன்சூர்பூர் போலீஸார், தீவிர விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக தீபக் சிங்கால் என்ற வாலிபரை கைது செய்தனர். எதற்காக அவர் ஷிவானியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபரீத்தில் முடிய வேண்டிய திருமணம், சுபமாக நடந்ததால் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here