பத்து பூத்தே மீதான தீர்ப்பு: சரவாக்கின் எண்ணெய், கியாஸ் உரிமை கோரிக்கைக்கு தடையாக இருக்கும் – ஸைட்

பெட்டாலிங் ஜெயா 

பத்து பூத்தே தீவு மீதான மலேசியாவின் உரிமை கோரல் தொடர்பில் அனைத்துலக நீதீமன்றம் 16 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய பாதகமான தீர்ப்பு, சரவாக்கின் கடற்கரை ஓரம் உள்ள அதன் எண்ணெய், கியாஸ் (O&G) மீதான உரிமை கோரல் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிப்பதில் ஒரு திறவுகோலாக இருக்கும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம் கூறினார்.

பத்து பூத்தே மீதான மலேசியா – சிங்கப்பூர் இடையிலான சர்ச்சையில் அனைத்துலக நீதிமன்றம் வழங்கி இருக்கும் எதிர்மறையான தீர்ப்பின் தாக்கம்
தன்னுடைய கடல் பகுதி படுகையில் காணப்படும் வளங்கள் மீது சரவாக் கோரி வரும் உரிமைப் போராட்டத்தை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு தாக்கம் என்பது சட்டத்தின் அசல் நடவடிக்கையை சுட்டிக்காட்டுகிறது. பிரதேச கட்டுப்பாடு அல்லது நிர்வாகம்
தொடர்பில் ஒரு வகையான அதிகாரத்தை கொண்டிருக்கிறது.

மேலும் ஒரு பிரதேசம் மீது ஒரு மாநிலம் ஓர் அசலான, தொடர்ச்சியான, அமைதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறதா என்பதையும் அது பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.

ஓர் உரிமை கோரல் சம்பந்தப்பட்ட இறையாண்மை சர்ச்சையில் இந்த கொள்கை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்று ஸைட் தெரிவித்தார்.

பத்து பூத்தே வரலாற்றுப்பூர்வமாக ஜோகூர் முடியாட்சிக்கு சொந்தமானது என்பதை அனைத்துலக நீதிமன்ற தீர்ப்பு அங்கீகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் 1851 ஆம் ஆண்டில் ஹோர்ஸ்பெர்க் லைட்ஹவுஸை நிர்மாணித்தது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அத்தீவில் மேற்கொண்டு வந்திருக்கிறது. அத்தீவை ஆக்கப்பூர்வமாக நிர்வகித்து அப்பகுதியில் கடல் ரோந்திலும் அது முதல் ஈடுபட்டு வந்திருக்கிறது.

மலேசியா அதன் பங்கிற்கு சிங்கப்பூரின் இச்செயலுக்கு ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. அத்தீவு மீதான தன்னுடைய சொந்த இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
. இதனால் சிங்கப்பூரின் இறையாண்மையை மலேசியா மதிக்கிறது என்பது அனைத்துலக நீதிமன்றத்தின் புரிதலாக இருந்தது.

இதேபோல்தான் பெட்ரோனாஸ் சரவாக்கின் கடல் பகுதியிலும் கடலோரத்திலும் அனைத்து எண்ணெய், கியாஸ் வளங்கள் மீது முழுக் கட்டுப்பாட்டையும் உரிமையையும் ஏற்றுக்கொண்டபோது சரவாக்கின் நடவடிக்கைகள் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பதாக அர்த்தம்கொள்ளப்பட்டது என்று ஸைட் தெரிவித்தார்.

Continental Shelf Act 1966 அல்லது Petroleum Development Act 1974 (PDA) ஆகிய சட்டங்கள் சட்டப்பூர்வமானவையா என்பது குறித்து வெகு நீண்ட காலத்திற்கு கேள்வி எழுப்பவும் இல்லை அதேசமயத்தில் மறுதலிக்கவும் இல்லை.

மேலும் அப்போதைய சரவாக் முதலமைச்சர் ரஹ்மான் யாக்கோப் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு Petroleum Development Act 1974 (PDA) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்.

இது தவிர, சரவாக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று அம்மசோதா சட்டமாவதற்கு வாக்களித்திருக்கலாம் என்று ஸைட் சொன்னார்.

அதே சமயத்தில் சரவாக் ராயல்டி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு அதன் கீழ் 50 ஆண்டுகளாக ராயல்டி தொகையை அனுபவித்து வருகிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் நீதிமன்றம் சென்றால் இவ்விவகாரங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

நிறைவேற்றப்பட்ட சட்டம், சரவாக்கின் எல்லைகள் கேள்விக்குறியாகலாம் மறுக்கப்படலாம் என்று 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக இருக்கும் ஸைட் குறிப்பிட்டார். இவர் மலேசியாவின் மிகப்பெரிய சட்ட நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக பங்குதாரரும் ஆவார்.

பழம்பெரும் அரசியல்வாதியும் சமூக, அரசியலமைப்பு சட்ட விவகாரங்கள் நிபுணருமான ஸைட், புத்ராஜெயா – சரவாக் இடையிலான சர்ச்சை பொது அனைத்துலக சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது என்று சொன்னார்.

கூட்டரசு அமைப்பிலான அரசாங்கத்தை கொண்டிருக்கும் காமன்வெல்த் ஆஸ்திரேலியாவிலும் இந்த நிலைப்பாடு தான் உள்ளது.

1954 ஆம் ஆண்டில் இரண்டாவது எலிஸபெத் மகாராணி பிறப்பித்த காலனித்துவ ஆணையை மேற்கோள் காட்டி தன்னுடைய கடல் பகுதியில் உள்ள அனைத்து எண்ணெய், கியாஸ் வளங்களும் தனக்கு சொந்தமானவை என்று சரவாக் அண்மையில் உரிமை கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.

தன்னுடைய கடல்படுகையை 200 கடல் மைல்கள் நீளத்திற்கு விரிவுப்படுத்திய சரவாக்கின் 1954 கவுன்சில் ஆர்டர் (எல்லை சீரமைப்பு) கீழ் வரும் வளங்களும் கடலடி வளங்களும் மாநிலத்திற்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது.

மாநிலத்தின் கியாஸ் எடுக்கும் பணியை பெட்ரோனாசிடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான சரவாக் பெட்ரொலியம் (பெட்ரோஸ்) நிறுவனம் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று சரவாக் மாநில அரசாங்கம் விரும்புகிறது.

மாநிலத்தில் கியாஸ் தோண்டும் பெட்ரோசின் ஏகபோக உரிமையை அவமதிக்கும் எந்த தரப்பையும் நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு தாம் தயார் என்று சரவாக் பிரிமியர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் கடந்த ஞாயிற்று கிழமை கூறியிருந்தார்.

சரவாக்கின் இந்த உரிமை கோரிக்கையை நிராகரித்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரஸாலி ஹம்ஸா ஆகிய இருவரும் PDA சட்டத்தின் கீழ் அனைத்து எரி சக்தி வளங்களும் கடலோர நடவடிக்கைகளும் பெட்ரோனாசுக்கே சொந்தம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர்.

இந்த சர்ச்சைக்கு ஒரு தீர்வு காணும் முயற்சியாக பெட்ரோனாஸ் – சரவாக் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here