கெய்ரோ:எகிப்தின் செங்கடல் பிராந்தியத்தில் உள்ள மர்சா ஆலம் நகரில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு உல்லாச படகு புறப்பட்டு சென்றது. 4 தளங்கள் கொண்ட அந்த படகில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், போலந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சீனா, ஸ்லோவேகியா, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 31 சுற்றுலா பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் என மொத்தம் 44 பேர் பயணித்தனர்.
இந்த படகு நேற்று அதிகாலையில் செங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் படகு சாய்ந்து மூழ்கத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்த 28 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சிலர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில நிமிடங்களில் படகு முழுவதுமாக மூழ்கிவிட்டது.
அதன்பின்னர் மீதமுள்ள 16 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்று 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 13 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.செங்கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் செங்கடல் பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராணுவ மோதல்களால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக செங்கடலில் படகுகளை இயக்குவதை பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. சில நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே படகுகளை இயக்குகின்றன.