மலாய்க்காரர்களின் நலன் பாதுகாக்கப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

டானி அரசாங்கம், அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையை அதிகம் பின்பற்றி வருவதால் தங்களின் அக்கறைகள் விட்டுக்கொடுக்கப்படலாம் என்று மலாய் இனத்தவரிடையே எழுந்துள்ள கவலை தவறானது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின்கீழ் மலாய் மன்னர்களின் நிலை, மலாய் இனத்தவர் மற்றும் இஸ்லாமிய சமயத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள், மலாய் மொழி நாட்டின் தேசிய மொழியாக இருப்பது ஆகியவை ஒருபோதும் பாதிக்கப்படாது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“இன்னும் சொல்லப்போனால் தற்போதைய அரசாங்கத்தின்கீழ்தான், வெளிநாட்டுத் தரப்பிடமிருந்து பண்டார் மலேசியா திட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட பிறகு மலாய் இனத்தவருக்கென 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

சுதந்திரம் கிடைத்த பிறகு முதன்முறையாக அவ்வாறு நிகழ்ந்துள்ளது,” என்றும் அவர் சுட்டினார். சனிக்கிழமையன்று (நவம்பர் 30) ‘எம்சிஓபிஏ’ (MCOBA) எனப்படும் மலாய் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரதமர் இவ்வாறு பேசினார்.

அரசாங்கம் திடமான முடிவுகளை எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும் போக்கை ஆதரிக்கிறது; அதேவேளை, பாரபட்சம் காட்டுவதில் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என்றும் அன்வார் கூறினார்.

முன்பு திடமான முடிவுகளுடன் செயல்படுத்தப்பட்ட பூமிபுத்திராத் திட்டம் போன்றவை, அதிகாரத்தில் இருப்போருக்குச் சாதகமாக இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். ஒட்டுமொத்த மலாய் சமூகத்தைக் கைவிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் அத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்களின் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், நவீன காலத்துக்கு ஏற்ப திடமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் போக்தைத் தாம் ஆதரிப்பதாகவும் திரு அன்வார் கூறினார். இப்போது அந்தப் போக்கு மேலும் வெளிப்படையாகவும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

அதனால் நகரங்களில் வாழும் வசதி குறைந்தோர், கிராமவாசிகள் உட்பட மலாய் சமூகத்தினர் அனைவருக்கும் பலன்கள் சமமாகச் சென்றடையும் என்று பிரதமர் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here