சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகின் எந்த நாடுகளும் வெள்ளத்தைத் தடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
சபா, சரவாக் உட்பட தீபகற்ப மலேசியா முழுவதும் வெள்ளத்தைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு 15 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் போதுமானவை அல்ல என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
வெள்ளம் தொடர்பான கேள்வி மிக முக்கியமானதுதான். ஆனால் பதில் அளிப்பதில் சிக்கல் உள்ளது ஏனெனில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு எந்த நாடும் உத்தரவாதம் அளிக்க முடியாது. சீனாவிலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளபோதிலும் அவற்றால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாது என்று அவர் கூறினார்.
கடலோரத்தில் உயரமான சுவர்களை எழுப்ப ஜப்பான் அனைத்துலக ஒத்துழைப்பு ஏஜென்சி ஆய்வு நடத்தியது. அதற்கு அதிக காலம் பிடிக்கும். வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் பூர்த்தியான பிறகு நமக்கு வேறு வழியில்லை. நாம் அந்தத் திட்டத்தை நோக்கித்தான் நகர வேண்டும் என்று அவர் கூறினார்.

கம்போங் பாரு விவகாரம்
கம்போங் சுங்கை பாரு, கம்போங் பாரு கோலாலம்பூரில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கும் மேம்பாட்டாளருக்கும் இடையேயான கூட்டு முயற்சிக்கான அழைப்பு கூட்டுப் பேச்சுவார்த்தை வழி எடுக்கப்பட்டதாகும் என்று பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா நேற்று மக்களவையில் கூறினார்.
நெருக்குதலோ, நெருக்கடியோ அல்லது வற்புறுத்தலோ அன்றி கூட்டுப் பேச்சுவார்த்தை வாயிலாகத்தான் இந்த முடிவு காணப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். மாற்று வீடுகள், வீட்டை விட்டு வெளியேறுவதற்கான செலவு, புதிய வீடுகளில் குடியேறுவதற்கான செலவு, இப்போதுள்ள வீடுகளைச் சீரமைப்பதற்கான தொகை, தற்காலிக வாடகைக் கட்டணம் ஆகிய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மக்களவையில் ஷா ஆலம் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்றச் சேவை சட்டம்
நாடாளுமன்றச் சேவை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவில் பணியிடங்கள், நாடாளுமன்றச் சேவைக்கான ஆள்பலம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை நடைபெறும் சிவில் சேவை சீரமைப்பு மீதான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் துறை (சட்டம் மறுசீரமைப்பு) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் நாடாளுமன் றத்தில் பதிலளித்தார்.
நாடாளுமன்றச் சேவை சட்ட மசோதாவும் கூட்டரசு அரசியலமைப்பு திருத்த சட்ட மசோதாவும் அமைச்சரவை யில் தாக்கல் செய்யப்படுவ தற்கு முன்னதாக இந்த விஷயத்தை அவசியம் விவாதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டிலிருந்து இது தொடர்பில் கலந்துரையாடலும் கூட்டமும் ஆய்வும் நடத் தப்பட்டுள்ளன. இதில் மேல வைத் தலைவர், நாடாளுமன்ற சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர் உள்ளிட்டோர். பங்கேற்றனர் என்றும் அவர் மேலும் சொன்னார். அதுமட்டுமன்றி சிவில் சேவை ஆணையம், சிவில் சேவைத்துறை, நிதி அமைச்சு, பொது வழக்கறிஞர்கள் துறை. அரசுசாரா அமைப்பு ஆகிய தரப்பினரும் இதில் பங்கேற்றதாக அவர் சொன்னார். மேலவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலை அளித்தார்.

இபிஎப் பணம் மீட்பு
இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் அறிமுகம் செய்த நெகிழ்வுத் தன்மை கொண்ட பணத்தை மீட்கும் கணக்குகள் மூலம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை 10.78 பில்லியன் ரிங்கிட் இபிஎப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
55 வயதுக்கும் கீழ்ப்பட்ட இபிஎப் சந்தாதாரர்களுள் 3.86 மில்லியன் பேர் அல்லது 29.4 விழுக்காட்டினர் இந்தப் பணத்தை மீட்டிருக்கின்றனர் என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. 3ஆவது கணக்குக் கீழ் சந்தாதாரர்களின் தேவை, குறிப்பாக அவசரத்தேவை அடிப்படையில் அவர்கள் எந்த நேரத்திலும் 3ஆவது கணக்கிலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ள முடிகிறது. மக்களவையில் தாசேக் குளுகோர் பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபுல் ருடின் வான் ஜான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.

ஒரே மொழியில் பேசலாம்
மலேசியர்கள் அனைவரும் எந்த இனமாக இருந்தாலும் அவர்கள் அன்றாட உரையாடலின்போது மலாய் மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலுதிரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் பரிந்துரை செய்தபோது கொஞ்சம் அமளி ஏற்பட்டது. இவருடைய பரிந்துரைக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் அதிருப்தி தெரிவித்தார். சீனர்களுக்கு சீன மொழியும் இந்தியர்களுக்குத் தமிழ்மொழியும் தாய்மொழியாக இருக்கின்ற நிலையில் இந்தப் பரிந்துரை எதற்கு என்று ராயர் கேள்வி கேட்டார். பெரிக்காத்தான் நேஷனலுக்கும் ரோஸோலுக்கும் பிரச்சினை உள்ளது என்றும் அத்தரப்பினர் தமிழ், சீன மொழியை எதிர்க்கின்றனர் என்றும் ராயர் சாடினார்.
சொந்தத் தாய்மொழியைப் பயன்படுத்துவதால் அது மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என உலுத்திரெங்கானு உறுப்பினர் கூறி வருகிறார். மலாய் சமூகத்தைச் சேர்ந்த நம் பிள்ளைகள் தமிழ் அல்லது சீனப் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கவில்லையா என அவர் கேட்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் தமிழ்மொழியையும் சீன மொழியையும் எதிர்க்கிறதா? அது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு முன் பேசிய ரோஸோல் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளைச் சந்தித்தபோது மலேசியர்கள் பல மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் வியப்பு தெரிவித்ததாகச் சொன்னார்.
மலேசியர்கள் நிறைய மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியர்கள் தமிழ் பேசுகிறார்கள் சீனர்கள் மாண்ட ரின் அல்லது ஹொக்கியான் மொழி பேசுகிறார்கள். மலாய்க்காரர்கள் மலாய்மொழி பேசுகிறார்கள் என்பதை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது தாங்கள் பார்த்ததாகவும் அந்த இந்தோனேசியர்கள் கூறியதாக ரோஸோல் தெரிவித்தார். சிங்கப்பூரிலும் இந்தோனே சியாவிலும் இப்படி இல்லை. அங்குள்ளவர்கள் ஆங்கில மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் பேசுகிறார்கள் என்று அவர் சொன்னார்.





























