இணைய பகடிவதை குறித்து நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் நம்மிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது என்று முன்னாள் மூத்த உதவி ஆணையர் டத்தோ சண்முகமூர்த்தி சின்னையா தெரிவித்தார்.
நான் 38 ஆண்டுகாலம் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறேன். என்னுடைய காலகட்டத்தில் ஒரு சமயத்தைச் சேர்ந்தவர்கள் இதர சமயத்தினரை இழிவுபடுத்துவர். அதற்கென ஒரு சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடிந்தது.
ஆனால் தற்போதைய இணைய பகடிவதைக்கென தனிச் சட்டம் இல்லை என்பதே வருத்தத்திற் குரிய விஷயமாகும்.
பொதுமக்களில் பலர் புகார் அளித்தவுடன் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அது இயலாத காரியம். நாட்டிற்கு நாடு சட்டம் மாறுபடுகிறது. நம் நாட்டில் 1998ஆம் ஆண்டு தகவல் பல்லூடகச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் சில சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. நீங்கள் புகார் அளிக்கும் நபர் செய்த பகடிவதையின் தீவிரத்திற்கு ஏற்பவே தண்டனை வழங்க முடியும் என செந்தூல் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரும் புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் துணை உதவி இயக்குநருமான டத்தோ சண்முகமூர்த்தி சின்னையா கருத்துரைத்தார்.
வழங்கப்படுகிறது.
சமீபத்தில் நாட்டை உலுக்கிய ஈஷாவின் மரணம் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் பகடிவதைக்கு ஆளாகி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்பட்ட நபர் ஒரு சிறிய தொகையை மட்டுமே அபராதமாகச் செலுத்தினார். அந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களில் பலர் தங்களின் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. ஏனெனில் 1998ஆம் ஆண்டு தகவல் பல்லூடகச் சட்டப்பிரிவின் கீழ் சில துணைச் சட்டங்கள் இருக்கின்றன. அதனால் ஈஷா மரணத்திற்குக் காரணம் எனச் சந்தேகப்பட்ட நபர் செய்தது அவருக்கு வழங்கப்பட்ட அபாரதத் தொகைக்கு உட்பட்டது என்றும் டத்தோ சண்முகமூர்த்தி தெளிவுபடுத்தினார்.
ஈஷாவின் மரணத்திற்குப் பிறகு அரசாங்கம் இணைய பகடிவதைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டதிருத்தத்தை விரைந்து அமல்படுத்தி பகடிவதையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தான் ஓர் உயர் போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல் சட்டக்கல்வி (வழக்கறிஞர்), பேராசிரியராக இருப்பதால் திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பிறரைத் துன்பப்படுத்தாதீர் என்பதே தனது தாழ்மையான வேண்டுகோள் என்கிறார் டத்தோ சண்முகமூர்த்தி சின்னையா.