சிவனுக்கு இந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் பொரி படைத்து வழிபடுவதற்கு முக்கியமான காரணம் உள்ளது. இந்த கார்த்திகை பொரிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இதை எதற்காக படைக்கும் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.திருக்கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி, வீடுகள் தோறும் இறைவனை ஜோதி வடிவமாக எழுந்தருள செய்வது வழக்கம்.
சிவ பெருமான் ஜோதிட வடிவமாக காட்சி தந்ததன் நினைவாக திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. மற்ற எந்த நாளிலும் இல்லாத தனிச்சிறப்பாக திருக்கார்த்திகை அன்று மட்டும் சிவ பெருமானுக்கு நெல் பொரி, பொரி உருண்டை ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இதற்கு கார்த்திகை பொரி என்றே பெயர்.
இது சிவனுக்குரிய மிக முக்கியமான நைவேத்தியப் பொருளாக கருதப்படுகிறது. இந்த நாளில் மட்டும் பொரியை நைவேத்தியமாக படைத்து வழிபடுவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது.
ஆகம விதிகளின் படி, சிவ பெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து, 32 வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்வது மிக உயர்வானதாகும். அப்படி வழிபட முடியாதவர்கள் 11 வகையான உபசாரங்களுடன் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் சந்தனம், பூ, நைவேத்யம், தூபம், தீபம் என்ற ஐந்து உபசாரங்கள் செய்து வழிபடலாம். இது எதுவும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக ஒரே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டாலே மேலே சொன்ன அனைத்தும் செய்து வழிபட்ட பலனை சிவ பெருமான் அருள்வார் என்பது நம்பிக்கை.
சிவ பெருமான் நெருப்பு வடிவமாக காட்சி தந்தவர். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து உருவான நெருப்பு பொரியில் இருந்து தோன்றி, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகப் பெருமான். அதே போல் பராசக்தியான துர்கா தேவிக்கு கார்த்திகா என்ற திருநாமம் உண்டு. இவளும் அக்னி வடிவமானவள்.
நம்முடைய வீடுகளில் தீபங்கள் ஏற்றும் போது அதிலுள்ள அக்னியில் சிவன், முருகன், பார்வதி தேவி, கார்த்திகை பெண்கள் ஆகியோர் எழுந்தருளி நமக்கு அருள் செய்வதாக ஐதீகம். நெருப்பின் வடிவமான இவர்களின் இனிமையான கருணை குணத்தை குறிக்கும் வகையிலும், அவர்களின் அருளை பெறுவதற்காக திருக்கார்த்திகை தீபத்தன்று நைவேத்தியமாக படைத்து வழிபடப்படுகிறது.