இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக மும்பை காவல் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கூறியுள்ளனர்.
வங்கியின் அதிகாரத்துவ இணையத்தளத்துக்கு டிசம்பர் 12 நண்பகலில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறை அதிகாரி கூறினார்.
முன்னதாக நவம்பர் 16ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அழைத்தவர் “லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி” என்று தன்னைக் கூறிக்கொண்டதாகவும் மிரட்டல் விடுப்பதற்கு முன் ஒரு பாடலைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.