நாம் அன்றாடம் கேள்விப்படும் ஒரு விஷயமாக மாறி விட்டது இணைய பகடிவதை. முகம் தெரியாதவர்களால் பலர் நிமிடத்திற்கு நிமிடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் இணைய பகடிவதைக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதை நாம் அறிவோம். அந்தச் சட்டதிருத்தம் உண்மையிலேயே இணைய பகடிவதைக்கு ஆளாகுபவர்களுக்கு நன்மை பயக்குமா என்பது குறித்து வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
கே: தற்பொழுது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் இணைய பகடிவதைக்கான சட்டதிருத்தம் குறித்து உங்களின் கருத்து ?
ப: சட்டதிருத்தம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் சட்டதிருத்தம் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர முடியுமா என்றால் அது சந்தேகம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் தற்பொழுது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டதிருத்தம் சிறைத்தண்டனை, அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக அபராதத் தொகை 50,000 ரிங்கிட்டில் இருந்து 500,000 ரிங்கிட்டிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் தவறு எந்தளவிற்குத் தீவிரமானது என்பதனை யார் நிர்ணயம் செய்கின்றனர்? நீதிமன்றமா அல்லது வேறு யாராவது அதனை நிர்ணயம் செய்வார்களா என்பதே தற்பொழுது அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.
கே: இணைய பகடிவதை குறித்து உங்களின் கருத்து ?
ப: இணைய பகடிவதையைத் தடுக்க சரியான சட்ட வரைமுறைகள் மிகவும் அவசியம். ஏனெனில் சமீபத்தில் உயிரிழந்த இஷா வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு 100 ரிங்கிட் அபராதமும் வேறொருவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பலருக்கு சந்தேகம் என்னவென்றால் ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஏன் வெவ்வேறு தண்டனை என்பதுதான். சில இணைய பகடிவதைகள் சிறு குற்றங்களாகக் கருத்தில் கொள்ளப்படுவதால் அதற்கான அபராதத்தொகை 100 ரிங்கிட் மட்டுமே என்பதுதான். மேலும் முதல் முறை தவறு செய்தவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்போது வழங்கப்படும் தண்டனை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்பதனையும் நான் உங்களுக்கு இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ப: அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது மிகவும் அவசியம். மேலும் இணைய பகடிவதை சட்டதிருத்தத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்த பின்னர் அமல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஏனெனில் சட்டதிருத்தம் அடிக்கடி கொண்டு வரக்கூடியது அல்ல. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்போது அது தூரநோக்குச் சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும். சட்டதிருத்தத்தைக் கொண்டு வரும்போது தவறுக்கான தண்டனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கொண்டு வரப்படும் சட்டதிருத்தம் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
கே: இணைய பகடிவதையை எவ்வாறு தடுக்கலாம் ?
ப: இணைய பகடிவதையைத் தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் காவல்துறையினர் அல்லது அமைச்சகம் மட்டுமே இணைய பகடிவதைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்பதனை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் பிரச்சினை நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கிறது. நாம் சமூக ஊடகங்களில் பதிவிடும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு. அதேபோல் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ அல்லது செய்திகளையோ பரப்ப வேண்டாம் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள். ஏனெனில் நீங்கள் பகிரும் ஒவ்வொரு செய்தியும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இணைய பகடிவதை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நடந்தால் அதனை வேடிக்கையாகவும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு நடந்தால் அது வேதனையான விஷயமாகவும் பார்க்கப்படுவது முதலில் நிறுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் இணைய பகடிவதையில் பாதிக்கப்படுபவர் யாருடைய சகோதரியாகவோ அல்லது பிள்ளையாகவோ இருக்கலாம் என்பதனை நாம் உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாமலாவது இருக்கலாம் என்பதே எனது வேண்டுகோள் என்கிறார் கோகிலவாணி வடிவேலு