ஓஸ்லோ:
நார்வேயில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 58 வெளிநாட்டுப் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமுற்றதாக அந்நாட்டு காவல்துறை நேற்று (டிசம்பர் 26) தெரிவித்தது.
சாலையிலிருந்து விலகிச் சென்ற அப்பேருந்து, நார்வேயிலிருந்து லோஃபோட்டன் தீவுக்கூட்டத்தைப் பிரிக்கும் ரஃப்சண்டேக்கு அருகே உள்ள ஆற்றில் பகுதியளவு மூழ்கியது.
“பேருந்தில் இருந்தவர்கள் பலரும் வெளிநாட்டவர்கள்,” என்று கூறிய காவல்துறை, 58 பேர் இதனால் பாதிக்கப்பட்டதாகச் சொன்னது.
சீனா, பிரான்ஸ், இந்தியா, மலேசியா, ஹாலந்து, நார்வே, சிங்கப்பூர், தென் சூடான் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலர் உள்ளூர் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஹெலிகாப்டரில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மேலும் அந்தப் பகுதியில் வானிலை நிலவரம் மோசமாக இருப்பதால், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,” என்று காவல்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.