கோலாலம்பூர்:
டிசம்பர் 15 முதல் டிசம்பர் 21 வரையிலான காலப்பகுதியில் (ME51) நாடு முழுவதும் டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்துள்ளது, இது முந்தைய வாரத்தில் 1,384 ஆக இருந்தது என்று கூறப்படுகிறது.
அதேநேரம் இக்கால கட்டத்தில் கொசுக்களால் பரவும் நோய் காரணமாக இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர்-ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 120,418 டிங்கி காய்ச்சல் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ME51 வரை பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 121,082 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“டிங்கி காய்ச்சலால் இந்தாண்டு மொத்தம் 116 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதேநேரம் 2023 இல் இதே காலகட்டத்தில் 96 இறப்புகள் பதிவாகியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் சிலாங்கூரில் ஒன்பது இடங்களும், நெகிரி செம்பிலானில் நான்கும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டாட்சிப் பிரதேசங்களில் மூன்றும், பகாங் மற்றும் பினாங்கில் தலா ஒன்றும் அதிக நோய்ப்பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே விடுமுறைக் காலங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதால் டிங்கி நோய் எளிதாக பரவு முடியும் என அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். எனவே, சுற்றுப்புறங்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்று அவர் சொன்னார்.






















