மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முழு அரச மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசாங்கம் அவரது இறுதிச் சடங்குகளை நிகம்பாத் தகனச்சாலையில் நடத்தும்படியும் நினைவு மண்டபம் கட்ட பின்னர் நிலம் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் தெரிவித்தது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை சிங்கின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கூறியது.
சிங்கின் மறைவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சி செயற்குழு, திரு சிங் இந்திய அரசியல், பொருளியல் முகப்பை மாற்றியமைத்ததுடன் அவர் ஆற்றிய சிறப்பான பணியால் உலகம் முழுவதும் பெருமதிப்பு பெற்றுத் திகழ்ந்தார் எனப் புகழாரம் சூட்டியது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27ஆம் தேதி) அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு என்றும் இந்தியா ஒரு திறமையான தலைவரை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை சிங்கின் இறுதிச் சடங்குக்கு முன்னால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கின் மறைவு குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அவர் இந்திய-அமெரிக்க உத்திபூர்வ பங்காளித்துவ உறவை போற்றிப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் என்று விளக்கினார். அவர் இரு நாடுகளும் நெருங்கி வரக் காரணமாக விளங்கினார் எனப் புகழாரம் சூட்டினார்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் உட்பட பல உலகத் தலைவர்களும் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.





















