மேஷம்
(அசுவினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை முதல் பாதம் மட்டும்).
அன்பான மேஷ ராசிக்காரர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு 2025 பிறக்கும்போது உள்ள கிரக நிலவரங்களைப் பார்க்கும்போது 2ஆம் இடத்தில் குரு பகவான் வக்கிரத்தில் ஒரு மாதத்திற்கு மட்டும். பிறகு 4.2.2025இல் வக்கிர நிவர்த்தியாகிறார். நான்காமிடத்தில் செவ்வாய் வக்கிரம், ஆறாமிடம் கேது, 9ஆம் இடம் புதன், சூரியன், 11ஆம் இடத்தில் சனி பகவான், சுக்கிரன், 12ஆம் இடத்தில் ராகு இவ்வாறான கிரக நிலவரங்களின்படி பார்க்கும்போது மிக மிகச் சிறப்பான யோகமான காலகட்டமாகத்தான் காணப்பட்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
முதல் நான்கரை மாதங்களுக்கு நன்றாகவே காணப்பட்டு வரும் என்று சொல்லும் அதேவேளையில் (அதாவது இரண்டாமிட குரு 14.5.2025 அன்று ராசிக்கு 3ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு செல்கிற வரைக்கும்)இடையில் 29.3.2025 அன்றே திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ராசிக்கு 12ஆம்இடம் என்று சொல்லக்கூடிய விரயஸ்தானத்திற்கு வந்து சேர்வது முதல் ஏழரை நாட்டுச் சனி ஆரம்பிக்கிறது என்றும் சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.
ஆக இந்த அளவில் பார்க்கும்போது இந்தப் புத்தாண்டு பிறந்தவுடன் முதல் நான்கரை மாதங்களுக்கு மிகுந்த நன்மையாகவே காணப்பட்டு வரும் என்றேதான் சொல்ல வேண்டியதாகிறது. இந்தக் காலகட்டத்தில் வரும் 1.1.2025 முதல் 13.5.2025 வரை உள்ள நான்கரை மாதங்களுக்குப் பல வகையில் நல்ல நேரமாகவேதான் காணப்பட்டு வரும் என்பதில் எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லை என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.
வேலை தேடும் நபர்களுக்கு உடனடியாகக் கிடைப்பதற்கும் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உயர்வு வந்து சேர்வதற்கும் குடும்பத்தில் நடக்காமல் இருந்து வந்த அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் இப்போது நடந்து முடிவதற்கும் வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு இந்தச் சமயத்தில் உடனடியாகச் செல்வதற்குண்டான அனைத்து விதமான விஷயங்களும் நடந்து முடிவதற்கும் வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களாகக் கைக்கு வந்து சேராமல் காலம் தள்ளி வந்திருந்த பணம், வர வேண்டிய பணம் இப்போது உடனுக்குடன் கைக்கு வந்து சேர்வதற்கும் உடல் நலத்தில் காணப்பட்டு வந்த சிறு சிறு தொந்தரவுகள்கூட மறைந்து நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டு வருவதற்கும் புதிதாக ஏதாவது ஒரு தொழில், வியாபாரம் ஆரம்பிப்பதற்கும் இந்தச் சமயத்தில் வாய்ப்பிருக்கிறது.
மேலும் சொந்த வீடு வாங்கி உடனடியாகக் கிரகப் பிரவேசம் செய்வதற்கும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வந்து சேரும் என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது. மேலும் இந்தக் காலகட்டத்தில் அதாவது முதல் நான்கரை மாதங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பது எதுவானாலும் உடன் கைக்கு வந்து சேர்வதற்கும் எதிர்பார்க்கிற இடங்களில் இருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேர்வதற்கும் நீண்ட நாளைய முயற்சிகளுக்கு நல்லதொரு பலன்கள் காண்பதற்கும் ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவதற்கும் நீண்ட நாளைய மனக்கவலைகள் மறைந்து மகிழ்ச்சி காணப்பட்டு வருவதற்கும் திடீர்ப் பயணமாக வெளியூர் / வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வந்து சேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் ஒரு சிலருக்குப் புதிதாக வண்டி / வாகனம் வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றுகூடச் சொல்ல இடமிருக்கிறது. அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய சமாச்சாரங்கள் எதுவானாலும் உடனுக்குடன் சாதகமாகவும் ஆதாயகரமாகவும்
வெற்றியுடனும் நடந்து முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்தச் சமயத்தில் திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. அரசியலில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு புதிய பட்டம், பதவி என்று தேடி வந்து சேர்வதற்கும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு, தேவையான இடமாற்றம் முதலியன இந்த முதல் நான்கரை மாதங்களுக்குள்ளாக நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து முதலியன விருத்தியாவதற்கும் மேலும் இக்காலகட்டத்தில் குடும்பத்துடன் வெளியூர் சென்று சாமி வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், குலதெய்வ வழிபாடுகள் முதலியனவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. நீண்ட நாளைய தடங்கல்கள், தடைகள், முட்டுக்கட்டைகள் நிவர்த்தியாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் பிறகு வரும் 14.5.2025 முதல் குருபகவான் ராசிக்கு மூன்றாமிடத்திற்கு வருவதும் ஏற்கெனவே இரண்டு மாதங்களாகவே ஏழரை நாட்டுச் சனிபகவான் அதாவது 12ஆம் இடத்தில் வந்திருப்பதையும் வைத்துப் பார்க்கும்போது ஆறு மாதங்களுக்கு அதாவது 11.11.2025 வரைக்கும் அதாவது குரு பகவான் மூன்றாமிடத்தில் வக்கிர சஞ்சாரம் ஆரம்பிக்கிற வரைக்கும் கொஞ்சம் போதாது என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.
ஒரு பக்கம் சனிபகவானின் தொல்லைகள், இன்னொரு பக்கம் மூன்றாமிட குருபகவானின் மந்தமான, குழப்பமான ஒரு நிலைப்பாடு. இப்படியாகவேதான் காணப்பட்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு காரியமானாலும் முயற்சிகளில் முட்டுக்கட்டைகள், தடங்கல்கள், தடைகள், வந்து சேர்வதற்கும் எதிர்பார்க்கிறது எதுவானாலும் கைக்கு எட்டியது வாய்ப்பு எட்டாமல் போவதற்கும் எதிர்பார்க்கிற இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள், தகவல்கள்கூட மனத்துக்கு சஞ்சலத்தையும் உளைச்சலையும் தரக்கூடியதாகவே வந்து சேரும்.
மேலும் இந்த மூன்றாமிட குருவின் காலத்தில் நீங்கள் சிவனே என்று வீட்டில் இருந்தாலும் வீண் சிக்கல்கள், வீண் பிரச்சினைகள், வீண் தொந்தரவுகள், வீண் வம்புகள் இப்படி ஏதாவது ஒன்று போனால் ஒன்று என வீடு தேடி வந்து சேர்வதற்கும் இந்தக் காலகட்டத்தில் வருமானம் குறைவாகவும் செலவுகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் ஏற்படும் என்றுகூடச் சொல்ல வேண்டியதாகிறது. மேலும் இந்தச் சமயத்தில் படுத்தல்கள் பலவிதத்தில் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள், பிரச்சினைகள், குறைபாடுகள் ஏற்பட்டு சிறிதளவு மருத்துவச் செலவுகள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
வர வேண்டிய பணம்கூட சமயத்தில் கைக்கு வந்து சேராமல் காலம் தள்ளிப் போவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு பக்கம் பணக்கஷ்டம், இன்னொரு பக்கம் மனக் கஷ்டம் என்று இரண்டும் சேர்ந்து கொண்டு படுத்துவதற்குத்தான் வாய்ப்பு காணப்படுகிறது. குடும்பத்தில் குழப்பமான ஒரு சூழ்நிலை காணப்பட்டு வருவதற்கும் எந்தவொரு சுப நிகழ்ச்சியோ நல்ல நிகழ்ச்சியோகூட அருகில் வந்து காலம் தள்ளிப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
அரசாங்கத்திலிருந்துகூட சில பிரச்சினைகள், சில சிக்கல்கள், கெடுபிடிகள் தேடி வந்து சேர்வதற்கும் சந்தர்ப்பமிருக்கிறது. கவனம் தேவை. எந்தவொரு வருமானமும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. வரவு குறைவு – செலவுகள் அதிகம்.