மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜகவினர் கைது

மதுரை,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி பேரணியாக செல்லும் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், மதுரையில் இருந்து பாஜக மகளிர் அணியினர் இன்று சென்னைக்கு பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தலைமை தாங்கினார். ஆனால், பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி பேரணி தொடங்கியது.

இதையடுத்து, தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜக மகளிரணியினரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை, பேரணியாக செல்ல முயன்ற பாஜக மகளிரணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பாஜக மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மகளிரணி நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here