டில்லிராணி முத்து
சபாக் பெர்ணம்:
காலில் திடீரென ஏற்பட்ட புண்ணால் நடக்க முடியாமல் பல இன்னல்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருகிறார் சபாக் பெர்ணம், தோக் இந்தான் தோட்டத்தைச் சேர்ந்த 38 வயது குணசேகரன் கிருஷ்ணன்.
குணசேகரனுக்கு, லோகேஸ்வரி குமார் என்ற 25 வயது மனைவியும், 10 மாத பெண் கைக்குழந்தையும் இருக்கின்றனர். குணசேகரன் சபாக் பெர்ணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்ததார். நண்பர்கள் அழைத்தால் தோட்டங்களில் கூலி வேலைக்கும் செல்வேன் என்று மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.
ஒரு நாளுக்கு 500 தேங்காய்கள் உறித்தால் 40.00 ரிங்கிட் சம்பளம். அது தினசரி குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. ஆதலால் தோட்டங்களில் ஏதாவது தற்காலிக வேலை கிடைத்தால் குடும்ப செலவுகளைச் சமாளிக்க கூலி வேலைக்குச் செல்வேன்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு குணசேகரன் இங்குள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் கூலி வேலைக்குச் சென்றபோது அங்கு செம்பனை முள்
இடது காலின் முட்டியில் குத்தி கடுமையான வலி ஏற்பட்டதாகச் சொன்னார்.
பின்னர் வலியைத் தாங்கிக் கொண்டு அம்முள்ளை தாமே எடுத்து விட்டதாகவும் கூறினார்.
அதன் பின்னர் வலி எதுவும் இல்லை என்றும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு பிறகு தோட்டத்தில் மழை நேரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது கால் வழுக்கி கீழே விழுந்து விட்டேன்.
அப்போது எனது இடது காலில் நரம்பு இழுத்துக் கொண்டு கடுமையான வலி ஏற்பட்டது.
மறுநாள் வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் இங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள் என் காலை பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை எனக் கூறி எனது காலில் கட்டுப் (bandage) போட்டு, வலி தாங்குவதற்கு மருந்துகளைக் கொடுத்தனர்.
கட்டுப் போட்ட 2 லிருந்து 3 மணி நேரத்திற்குள் என்னுடைய இடது காலில் வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் கடுமையாகிவிட்டது. கட்டை பிரித்து பார்த்துபோது காலின் தோல்கள் உரிந்து இருந்தன. நேரம் ஆக ஆக எரிச்சல் உண்டாகி வலியும் அதிகரித்து விட்டது.
எனவே மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்குச் சென்று நடந்ததை மருத்துவரிடம் கூறினேன். என் காலை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள் உடனடியாக என்னை வார்டில் அனுமதித்தனர். பிறகு என் காலில் கிருமிகள் தாக்கியுள்ளனவா என்று சோதிக்க தஞ்சோங் காராங் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அம்மருத்துவமனையிலும் காலில் ஒன்றும் இல்லை என்று கூறி மீண்டும் சபாக் பெர்ணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
இங்கு 14 நாட்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினேன். வீடு திரும்பிய ஓரிரு நாட்களில் புண் இருந்த இடது காலிலிருந்து சீழ் வெளியாக ஆரம்பித்து விட்டது. கொடூர வலி ஏற்பட்டதாலும் பயந்து கொண்டு மீண்டும் சபாக் பெர்ணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அன்று இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மீண்டும் தஞ்சோங் காராங் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டேன்.
அங்கு என் காலை பரிசோத்த மருத்துவர்கள் புண் ஏற்பட்ட என் இடது காலில் உயிரோட்டம் இல்லை எனவும் அதன் சதைகள் உயிரற்ற நிலையில் இருக்கின்ற எனவும் அதனை வெட்டி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.
இந்நிலையில் அக்காலில் உயிரற்ற பகுதிகளை வெட்டி எடுத்து விட்டனர் என்று குணசேகரன் மிகுந்த வேதனையுடன் மக்கள் ஓசையிடம் குறிப்பிட்டார்.
என்னால் நடக்க முடியாததால் இப்போது என் மனைவி லோகேஸ்வரி தான் என்னை முழுமையாகக் கவனித்துக் கொள்கிறார். என்னால் எதையும் சொந்தமாகச் செய்துக் கொள்ள முடியவில்லை. கால் குணமாகும் வரை என்னால் வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலை. தினசரி பெம்பர்ஸ் அணிந்தாக வேண்டும். Wet tissue பயன்படுத்தியாக வேண்டும்.
மேலும் எங்களின் 10 மாதக் கைக்குழந்தைக்கும் பால் மாவும் பெம்பர்ஸும் வாங்க வேண்டும். ஆனால் எனக்கோ தற்போது எந்தவொரு வருமானமும் இல்லை என்பதால் குழந்தைக்கு பால் மாவும், பெம்பர்ஸும் வாங்கக் கூட பணம் இன்றி தவிக்கிறேன்.
வயிரார உண்ணுவதற்கு கூட போதுமான உணவும் கிடைப்பதில்லை. நான் பசி பட்டினியால் வாடலாம். ஆனால் என் பச்சிளம் குழந்தை பசியால் வாடுவதை என்னால் பார்க்கவே முடியவில்லை. எனவே இந்த மக்கள் இசை நாளிதழின் மூலம் எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு மலேசியா வாழ் மக்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் உதவ முன்வர வேண்டும் என தன் கண்கள் கலங்கியவாறு குணசேகரன் தம் இரு கரங்கள் கூப்பிக் கேட்டுக் கொண்டார்.
நடக்க முடியாததால் எந்தவொரு வருமானமும் இன்றி வறுமையால் அவதியுற்று பல இன்னல்களை எதிர்நோக்கிவரும் குணசேகரனுக்கும், அவரின் மனைவி, குழந்தைக்கும் உதவ விரும்புவோர் 016 – 922 4531 என்றத் தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொண்டு இவர்களுக்கு உதவலாம்.