கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்ளூர் சமூக மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று Visit Malaysia 2026 பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தார்.
“எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது – நமது நாட்டின் சுற்றுலாத்துறை சமூகங்களுக்கிடையிலான நிலையான உறவை மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக செயல்படுகிறது என்றும், இயற்கையின் சொர்க்க பூமியான மலேசியா பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை வழங்குகிறது” என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்டில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது அன்வார் கூறினார்.
Visit Malaysia 2026 இன் தாக்கம் சுற்றுலாவைத் தாண்டி, எங்கள் மக்களின் விருந்தோம்பல், போக்குவரத்து, சில்லறை வணிகம் மற்றும் உணவுத் தொழில்கள் போன்ற துறைகளின் வளர்ச்ச்சிக்கும் மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் நாடு RM147.1 பில்லியன் வருவாயை ஈட்டுவதற்கான வாய்ப்பு யதார்த்தமாக உள்ளதுடன் நடைமுறைக்கு சாத்தியமானது என்றும் அவர் விவரித்தார்.
இந்த விழாவில் துணைப்பிரதமர்கள் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி , டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசூப், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் சாரி, தொடர்பு பல்லூடக அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் மற்றும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் உட்பட பல அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.