பெய்ஜிங்:
திபெத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், 53 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
நேப்பாள எல்லையில் அமைந்துள்ள டிங்ரி பகுதியில் காலை 9.05 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாகச் சீன நிலநடுக்கக் கட்டமைப்பு நிலையம் (CENC) கூறியது. இருப்பினும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம், அந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவு கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
டிங்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக வலுவான, நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் நில நடுக்கம் மையங்கொண்டிருந்த இடத்திற்கு அருகே பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் சீன அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
உள்ளூர் அதிகாரிகள் சேதத்தை மதிப்பிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 62,000 பேர் வசிப்பதாகவும் அது எவரெஸ்ட் சிகரத்தின் சீனப் பக்கத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.
அந்தப் பகுதியின் 200 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான ஆக வலுவான நிலநடுக்கம் இது என்று ‘CENC’ கூறியது.
இந்நிலையில், ஏறக்குறைய 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நேப்பாளத் தலைநகர் காத்மண்டு வரையிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியதாக அவை கூறின.
நேப்பாள எல்லையில் உள்ள இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 என்பது வலுவான நிலநடுக்கத்தைக் குறிக்கும். இதனால் பெருஞ்சேதம் விளையக்கூடும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 2008ஆம் ஆண்டு அங்குள்ள சிசுவான் வட்டாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 70,000 பேர் உயிரிழந்தனர்.