‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும்,’நம்பர் ஒன்’ வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) முதல் சுற்றில் தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியை சந்திக்கிறார்.
கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சையும், இறுதிப்போட்டியில் டேனில் மெட்விடேவையும் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சினெர் அதனை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் தயாராகி வருகிறார்.
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய அவர் காலிறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) அல்லது அலெக்ஸ் டிமினாரையோ (ஆஸ்திரேலியா), அரையிறுதியில் மெட்விடேவையோ சந்திக்க வேண்டியது வரலாம்.
10 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதலாவது ஆட்டத்தில் ‘வைல்டு கார்டு’ மூலம் களம்
இறங்கும் 133-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவாரெட்டியை எதிர்கொள்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபன் (10 முறை) மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை(24) வென்ற வீரர் என்ற பெருமைக்குரிய ஜோகோவிச் கடந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் வெல்லவில்லை. அந்த குறையை போக்கும் ஆர்வத்துடன் இருக்கும் அவருக்கு இந்த போட்டி தொடரில் கடும் பலப்பரீட்சை காத்திருக்கிறது.
அவர் எதிர்பார்த்தப்படி முன்னேற்றம் கண்டால் காலிறுதியில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்லஸ் அல்காரசுடனும் (ஸ்பெயின்), அரையிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவுடனும் (ஜெர்மனி) மோதக்கூடும்.