கோலாலம்பூர்:
சட்டவிரோதமாக நிலங்களை பரிமாற்றுதல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலக (PTD Klang) ஊழியர்கள் உட்பட பதினேழு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் “அரசு ஊழியர்கள்” ஈடுபட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஆணையர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.
“சந்தேக நபர்களில் ஏழு பேர் PTD ஊழியர்கள்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தெரிவித்தார்;
சட்டவிரோத நிலப் பரிமாற்றம் தொடர்பாக நவம்பர் மாதம் துணை மாவட்ட அதிகாரி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, தமது துறை தொடர்ச்சியாக மேற்கொண்ட புலனாய்வு மற்றும் விசாரணையின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றதாக அவர் சொன்னார்.
மேலும் RM7,101,000 மதிப்புள்ள 8.49 ஹெக்டேர் (21 ஏக்கர்) நிலம் தொடர்பான ஏழு வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.