ஜோகூர் பாரு:
ஜோகூர் குடிநுழைவுத் துறை மேற்கொணட “Ops Gegar” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கையின் போது, ஐந்து உள்ளூர் ஆண்கள் உட்பட மொத்தம் 49 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோகூரின் குளுவாங்கில் உள்ள நான்கு வளாகங்களில் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் என்றும், இந்த நடவடிக்கையின் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 90 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்,” என்றும் ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்கள், அங்குள்ள வளாக பராமரிப்பாளர்கள் என நம்பப்படுவதாக முகமட் ருஸ்டி மேலும் கூறினார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 27 வியட்நாம் பெண்கள், மூன்று இந்தோனேசிய ஆண்கள், ஒன்பது இந்தோனேசிய பெண்கள், இரண்டு தாய்லாந்து பெண்கள், இரண்டு பங்களாதேஷ் ஆண்கள் மற்றும் ஒரு நேபாளி ஆண் ஆகியோர் அடங்குவர்” என்று அவர் இன்று புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் விதி மீறல் குற்றங்களை செய்துள்ளதாகவும், சட்டவிரோதமாக குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 56(1)(d) இன் கீழ் ஐந்து உள்ளூர் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும், இவ்வழக்குடன் தொடர்புடைய விசாரணைக்கு உதவ குடிநுழைவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு தனிநபர்களுக்கு ஆறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும், அனைத்து கைதிகளும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக Setia Tropika குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.





















