கோலாலம்பூர்:
இந்திய சமூகத்துக்கான தொழில்முனைவோர் நிதி 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூக தொழில்முனைவோர் நிதியுதவித் திட்டமான Spumiயின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட்டும் SPUMI பெரு நிதியளிப்புத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
தைப்பொங்கல் திருநாளையொட்டி சுங்கை பூலோவில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நேர்காணலில் ரமணன் கலந்துகொண்டு பேசினார்.
இந்தியச் சமூகத்திற்கான பொருளியல் திறன் வளர்ப்புத் திட்ட மேம்பாட்டின் ஒரு பகுதியாக நிதியுதவி அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்த இரு நிதி உதவித் திட்டங்களின்கீழ் இவ்வாண்டு ஏறக்குறைய 5,000 இந்தியத் தொழில்முனைவோர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரமணன் கூறினார்.
சவால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையே தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்தியத் தொழில்முனைவோருக்கு அந்த நிதி உதவும் என்றார் அவர்.
மேலும் “2025 வரவுசெலவுத் திட்டத்தில் SPUMI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. ஆனால், நிதி உதவித் திட்டங்களை இவ்வாண்டு விரிவுபடுத்தி இந்திய சமூக முன்னேற்ற விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு பிரதமர் என்னைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மேலும் 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்து, இவ்வாண்டுக்கான மொத்த நிதி உதவி 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ள ஆக அதிகமான தொகை இது,” என்று கூறிய துணை அமைச்சர் ரமணன், நிதி உதவி தேவைப்படும் இந்தியத் தொழில்முனைவோர் ஜனவரி 14 முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றார்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 1,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை கடன் வழங்கப்படும். பெரு நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் அந்தத் தொகை 50,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் தொழில்முனைவோர் நிதி உதவித் திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை 26,804 இந்தியத் தொழில்முனைவோருக்கு 500 மில்லியன் ரிங்கிட் வரை நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் துணை அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டு SPUMI நிதி உதவித் திட்டத்தின்கீழ் 58.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் 1,863 இந்தியத் தொழில்முனைவோர் பலனடைந்தனர். அதேபோல, புதிதாகத் தொடங்கப்பட்ட பெரு நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் 287 தொழில்முனைவோர் பலனடைந்தனர். 12.6 மில்லியன் ரிங்கிட் அவர்களின் மேம்பாட்டுக்குக் கைகொடுத்தது என்றார்.