தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து குறைந்தது 78 பேரின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தரையிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள அச்சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சட்டவிரோதமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், ஸ்டில்ஃபோன்டைன் நகரில் அமைந்துள்ள அச்சுரங்கத்தை முற்றுகையிடும் பணி தொடங்கியது. சுரங்கத்தினுள்ளே இருப்போரை வெளியே வரவைத்து, கைதுசெய்யும் முயற்சியாக அவர்களுக்கான தண்ணீர், உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதியன்று அதிகாரிகள் ஓர் உலோகக் கூண்டைப் பயன்படுத்தி, அந்த ஆழ்சுரங்கத்தில் மீட்புப் பணியைத் தொடங்கினர். அந்நடவடிக்கை மேலும் பல நாள்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாள்களிலும் மொத்தம் 166 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், “இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. உள்ளிருப்போர் அனைவரும் எப்போது மீட்கப்பட்டு, மேலே கொண்டுவரப்படுவர் என்பதை உறுதியாகச் சொல்வதும் கடினம்,” என்று தென்னாப்பிரிக்கக் காவல்துறை அமைச்சர் சென்ஸோ எம்சுனு தெரிவித்துள்ளார்.