புற்றுநோயோடு போராடும் 14 பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற நீங்களும் உதவலாம் .

தி. மோகன்

சுபாங்ஜெயா,

நாட்டில் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் 14 பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பொதுமக்கள், பொது இயக்கங்கள், கார்ப்பரெட் நிறுவனங்கள் அவசர நிதி உதவி வாங்க வேண்டும் என்று மலேசிய சிறார் புற்றுநோய் காப்புச் சங்கத்தின் (சிசிஏஎம்) தோற்றுநரும் தலைவருமான லாவண்யா கணபதி கேட்டுக் கொண்டார்.

இவர்களின் உயிர்களைக் காப்பதற்கான சிகிச்சைகள், வெளிநாடுகளில் நிபுணத்துவப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு 1.8 மில்லியன் ரிங்கிட் நிதி திரட்டும் இலக்கை சிசிஏஎம் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மலேசியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 800 சிறார்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

துரித சிகிச்சை, முறையான பராமரிப்பு ஆகியவற்றால் 95 விழுக்கட்டு சிறார்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவது உலகளவிலான நடப்பு நிலவரமாக உள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை 65 விழுக்காடு சிறார்கள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். எஞ்சிய 35 விழுக்காட்டினர் உயிர் துறக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் நிதிச்சுமை, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாதததே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.


2023ஆம் ஆண்டில் மட்டும் 220 சிறார்கள் புற்றுநோயால் உயிரிழந்தனர். முறையான சிகிச்சையும் விரைவான மருத்துவ நடவடிக்கையும் வழங்கப்பட்டிருந்தால் இவர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்திருக்கும். இவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் நேரத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகவே இருக்கிறது என்று லாவண்யா தெரிவித்தார்.

மலேசியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளைப் பல மலேசியக் குடும்பங்களால் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவினரும் நடுத்தர வருமானக் குடும்பங்களும் தங்களது பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான நிதியின்றி அல்லாடுகின்றனர். 

அதேசமயம் இவர்களுக்கான மருந்து வாங்குவது என்பது மிகவும் சிரமமான, சுமைமிக்கதாக மாறிவிட்டது. மருந்துகளின் செலவு வானை முட்டும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இவர்களுக்கான மருந்தை வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 2ஆவது தடவை எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான செலவுகளை ஈடுகட்ட அவர்களால் முடியவில்லை.


காப்புறுதி எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. குடும்பங்களின் நிதிச்சுமை அவர்களைத் தள்ளாட வைக்கிறது. அரசாங்க மருத்துவமனைகளில் அதற்கான வளங்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று லாவண்யா நேற்று இங்கு நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த 14 பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்கு அவசியமான, அத்தியாவசியமான மருத்துவச் சிகிச்சைகளை விரைந்து வழங்குவதற்கு 1.8 மில்லியன் ரிங்கிட்டைத் திரட்டுவதற்கு சிசிஏஎம் களம் இறங்கி இருக்கிறது. உங்களது பங்களிப்பு அது ஒரு ரிங்கிட்டாக இருந்தாலும் இந்த 14 பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதாக லாவண்யா குறிப்பிட்டார். புற்றுநோய் என்பது ஒரு தேசிய நெருக்கடி. புற்றுநோயைப் பொறுத்தவரை பாரபட்சமில்லாமல் அனைவரையும் அனைத்துத் ஆட்டிப்படைக்கிறது. இந்த 14 பேரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசரத் தேவை தரப்பினரையும் ஏற்பட்டுள்ளது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டும் அவர்களின் உயிரைக் காப்பாற்றும் என்பதால் உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

லாவண்யாவை +60163312427 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.ccaminternational.com என்ற வலைத்தளத்தில் மேலதிகத் தகவல்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here