ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுகவின் வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
கடந்த 2011 தேர்தலில் தேமுதிக வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், தற்போதைய திமுக அமைச்சராக இருக்கும் முத்துசாமியை வீழ்த்தினார்.
தற்போது திமுக-வில் இணைந்து, கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2021, 2023 தேர்தல்களில் அத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினரான (2011) வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
மேலும் ஒன்பது சுயேச்சைகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகமும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும்தான் போட்டியிடவுள்ளன.




















