B.R. RAJAN
மலேசியாவின் கே9 (மோப்ப நாய் பிரிவு) உடல்நல மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு 8 வயதில் பணி ஓய்வு பெறுகின்றன. அதன் பின்னர் அவற்றுக்குத் தீவிரமான மருத்துவப் பராமரிப்பு, கவனிப்பு, மனிதாபிமான சிகிச்சைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
பணி ஓய்வுபெறும் கே9 நாய்கள் அப்பிரிவின் கூண்டுகளில் பாதுகாப்பாகக் காக்கப்படுகின்றன. சட்டத்தின் அமலாக்கத்தில் போற்றத்தக்கக்கூடிய உறுப்பினர்களாக இருந்த அவற்றுக்கு 24 மணி நேரமும் பரிவும் அக்கறையும் காட்டப்படுகிறது. சேவைக்காலத்தில் இவற்றுக்கு பதவிகள் வழங்கப்படுவதில்லை.
கோலாலம்பூர்,
நாட்டின் அமலாக்கத்தில் மலேசியாவின் கே9 மோப்ப நாய் பிரிவு மிகவும் அவசியமான, அத்தியாவசியமான பங்காளிகளாக உள்ளன. போதைப்பொருள் கண்டு பிடிப்பு, சந்தேகப் பேர்வழிகளைத் தேடிப் பிடிப்பது ஆகிய பணிகளில் தங்களைக் கையாளும் மனிதர்களோடு இணைந்து ஓய்வு ஒளிச்சலின்றி பணியாற்றுகின்றன.
தன்னுடைய குழுவினரைப் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் அவை ஏற்றிருக்கின்றன.உயர்தர பயிற்சியைப் பெற்றிருக்கும் இந்த மோப்ப நாய்கள் மூப்பு காரணமாகவோ காயமடைந்தாலோ சேவையில் அவற்றின் பங்களிப்பு அவசியமில்லாமல் போய்விடுகிறது. பரபரப்புமிக்க கடமையில் இருந்து அவை ஓய்வு பெற்ற பின்னர் அடுத்து அவற்றின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது?
இந்த மோப்ப நாய்கள் நமக்கு மிக முக்கியமான பங்காளிகளாக விளங்குகின்றன. நோய்வாய்ப்படும்போது அவற்றைக் கண்டும்காணாமல் விட்டு விடுவது மிகப்பெரிய துன்பத்தை நமக்குத் தருகிறது என்று புக்கிட் அமான் கிரிமினல் குற்றப் புலனாய்வு இலாகா, தொழில்டநுட்ப உதவிப் பிரிவு (டி6) உதவித் தலைமை இயக்குநர் ஏசிபி ஸுராய்மி ஸாம் ஸாம் கூறுகிறார்.
இதனால் அவற்றுக்கு உச்சபட்ச கவனிப்புக் கொடுக்கப்படுகிறது. கே9 பிரிவு உறுப்பினர் என்ற முறையில் அவற்றுக்கு உரிய மரியாதையும் கவனிப்பும் தரப்படுகிறது. உடல் மெலிந்து நடக்கக்கூட முடியாத நிலையை எட்டும் மோப்ப நாய்கள் கடைசி முயற்சியாக கருணைக் கொலை செய்யப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் 8 வயதிலிருந்து இவற்றின் பணி ஓய்வுக்காலம் தொடங்குகிறது. 8 வயது என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அல்ல. ஒவ்வொரு மோப்பநாயின் ஆரோக்கியம், உடற்பயிற்சி ஆகியவற்றின் நிலையைப் பொறுத்து பணி ஓய்வு நிர்ணயிக்கப் படுகிறது.
மோப்ப நாயின் உடல் ஆரோக்கி யம் மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது. தீராத நோய் இருக்கும்பட்சத்தில் அவற்றின் நிலை அறிந்து கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைக் கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும். மோப்ப நாய்க்கு இருதயம், இடுப்புப்பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை. இந்நிலையில் கால்நடை மருத்துவர்கள் வழங்கும் பரிந்துரைகளை முறையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு மோப்ப நாயின் பணி ஓய்வுக்காலம் நிர்ணயிக்கப்படு கிறது. 6 அல்லது 7 வயதிலும் அவை பணி ஓய்வு பெறுகின்றன என்று ஸுராய்மி தெரிவித்தார். மோப்ப நாய்கள் 9 அல்லது 10 வயதை எட்டும்போது அவை முழுமையாகப் பணி ஓய்வு பெற்றிருக்கும் அவற்றின் செயல்திறன் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் களப்பணிகளில் அவற்றால் தீவிரமாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். மோப்பநாய்களுக்கு நிறைவான பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. மாதாந்திர மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் ரத்தப் பரிசோதனையும் அடங்கும்.
மோப்ப நாய்கள் கடுமையான நோய்வாய்ப்பட்டால் அவற்றுக்கு அவசர சிகிச்சை வழங்கப்படுவதற்கு மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்படும். அலுவலக நேரத்திற்குப் பின்னர் ஏதும் நடந்தால் உடனடி மருத்துவக் கவனிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் தனியார் கால்நடை கிளினிக்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்று ஸுராய்மி கூறினார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கே9 பிரிவு கூண்டுகளில் அடைக்கப்பட்டு அவற்றுக்கு 24 மணி நேர பாதுகாப்பும் கவனிப்பும் இருக்கும். மோப்ப நாய்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றைக் கையாள்பவர்கள் அவர்களின் வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியாது. கே9 பிரிவில்தான் அவை நிரந்தரமாக வைக்கப்படும்.
மோப்ப நாய்கள் எந்தப் பதவியும் இல்லாமல் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் சேவைகளையும் வழங்குகின்றன. மோப்ப நாய்கள் மிகச்சிறந்த ஆளுமைமிக்க நல்ல பையன்கள் என்று ஸுராய்மி பெருமையுடன் கூறுகிறார்.
இவற்றுக்குப் பதவிகள் வழங்கப் படாவிடினும் எந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறதோ அதற்குரிய உயரிய அங்கீகாரம் வழங்கப்படும். கிரிமினல் குற்றங்கள், போதைப்பொருள் கண்டுபிடிப்பு, சடலங்கள் மீட்பு, வெடிகுண்டு – ஆயுதங்கள் கண்டுபிடிப்பு, மின்னியல் கருவிகளைப் பதுக்கி வைத்தல், காணாமல் போனவர் களைத் தேடிப் பிடிப்பது, புலன் விசாரணைக்குத் தேவைப்படும் சந்தேகப் பேர்வழிகளை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவ மும் நிபுணத்துவமும் பெற்ற மோப்ப நாய்கள் உள்ளன.
இந்த மோப்ப நாய்கள் பணி ஓய்வு பெற்றாலும் கே9 பிரிவில் தொடர்ந்து இருக்கும். அளவு கடந்த அன்பும் பரிவும் நேசமும் காட்டப்படும்.
இவற்றுக்கெல்லாம் மிகவும் பொருத்தமான ஜீவன்களாக கே9 மோப்ப நாய்கள் விளங்கு கின்றன. நோய்வாய்ப்பட்ட காலத்தில் இவை கருணைக் கொலை செய்யப்படமாட்டாது. எதுவும் செய்ய முடியாதபட்சத்தில் கடைசி முயற்சியாகத்தான் அந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொன்றும் பொக்கிஷ மாக மதிக்கப்படுகிறது. இந்தப் பிரிவுக்கு வரும்போது ஒவ்வொரு மோப்ப நாயின் பாதங்கள் தடமாகப் பதிக்கப்படு கின்றன. எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முயற்சிகளில் மோப்ப நாய்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாகிறது. இந்தப் பணிக்கு இன்னும் நிறைய மோப்ப நாய்கள் தேவைப்படுகின் றன. நம்முடைய பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் மோப்ப நாய்கள் இல்லை. கிட்டத்தட்ட 95 மோப்ப நாய்கள் பணி ஓய்வு பெற்று விட்டன அல்லது நோய்வாய்ப்பட்டு விட்டன அல்லது இறந்து விட்டன. இவற்றின் இடங்களை நிரப்புவதற்கு அரச மலேசிய போலீஸ் படைக்கு 95 மோப்ப நாய்கள் தேவைப்படுகின் றன. மோப்ப நாய்களின் திறனை மேலும் அதிகரிப்பதற்கு ஒவ்வோர் ஈராண்டும் 25 புதிய மோப்ப நாய்களைப் பெறுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று ஸுராய்மி கூறினார்.
தெரு நாய்களாக இருக்கட்டும் அல்லது அமலாக்கப் பிரிவுகளில் இருக்கட்டும், அவற்றைக் காயப்படுத்தாதீர். அவற்றின் மீது அன்பைக் கொட்டுங்கள், பரிவோடு இருங்கள் என்று ஸுராய்மி கேட்டுக் கொண்டார்.