மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்திற்கு இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ வலுவான ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் அழைப்பை ஏற்று அண்மையில் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகைப்புரிந்த அவர், இந்த வாக்குறுதியை மறு உறுதிப்படுத்தினார்.
2025 ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஏற்பது இப்பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
ஆசியான் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சவால்களை கடந்து செல்வதற்கு மலேசியாவின் தலைமைத்துவ வழிகாட்டல் திறன் உதவும் என்று பிராபோவோ குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அதிபரின் இந்த நம்பிக்கைக்கு அன்வாரின் ஆளுமை மிக்க தலைமைத்துவமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளப்பம் ஆகியவற்றின் இலக்குகளில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் உறுதி செய்யும் வகையில் மலேசியாவின் தலைமைத்துவம் திகழும் என்றார் அவர்.
ஆசியானின் பிரதேச மையத் தன்மையைப் பாதுகாப்பதற்கு மலேசியா – இந்தோனேசியா இடையிலான வலிமைமிக்க உறவு முக்கியப் பங்காற்ற முடியும் என்று பிராபோவோ தெரிவித்தார்.