கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிப் பிரச்சினை விரைவில் தீர்வு அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி

கெடா மாநிலம் கோலக்கெட்டிலில் உள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று டிஜிட்டல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியிருக்கிறார். இத்தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை நான் அறிவேன். அதனைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்வதாக அமைச்சர் கூறினார். மாணவர்களின் கல்வி மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்புக்கும் நாம் முன்னரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தாவார் தேசியப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த ஒரு வருடமாக அத்தேசியப்பள்ளியின் வளாகத்தில்தான் இத்தமிழ்ப்பள்ளி இயங்கி வந்தது. சம்பந்தப்பட்ட தேசியப்பள்ளி விரைவில் மறுசீரமைப்புச் செய்யப்படும் என்பதால் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசியப்பள்ளி வளாக கத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்பிரச்சினை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மாணவர்களின் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு சரியான தீர்வு காணப்பட வேண்டும். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் இந்தப் பிரச்சினையால் தடைபட்டு விடக்கூடாது. அதே வேளையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நான் கல்வி அமைச்சுடன் தொடர்புகொண்டு பேசினேன். விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எனது நோக்கம் என்றும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here