கோலாலம்பூர்,
கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிலவரப்படி அரசாங்கத் துறையில் (எஸ்பிஏ) மொத்தம் 47 ஆயிரத்து 960 பேர் அதாவது 3.75 விழுக்காட்டு இந்தியர்கள் மட்டுமே வேலை செய்வதாக கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா பிந்தி முஸ்தாஃபா தெரிவித்துள்ளார்.
ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் அரசாங்கத் துறையில் பணியாற்றும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள் ளார். அரசு சேவையில் பணியாற்றும் 12 லட்சத்து 66 ஆயிரத்து 474 பேரில் இந்தியர்களின் எண்ணிக்கை 47.950 பேர் என்று தெரிவித்த அவர்,அவர்களில் 255 பேர் உயர் நிர்வாகத் துறையிலும்31 ஆயிரத்து 116 பேர் நிர்வாக நிபுணத்துவ அதிகாரிகளாகவும் 16 ஆயிரத்து 589 பேர் அமலாக்க அதிகாரிகளாகவும் பணியாற்றுவதாகச் சொன்னார்.
இவர்களில் காவல்துறையிலும் ராணுவத்திலும் பணியாற்றுபவர்கள் உள்ளடங்கமாட்டார்கள் என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார். பொதுப்பணித்துறை நிர்வகிக்கும் 17 லட்சம் பணியாளர்களில் 28.0 விழுக்காட்டினர் மலாக்கா, பினாங்கு, நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மாநிலங்களுக்கான பணியாளர்கள் நியமனத்தைக் கையாள்கிறது.
அரசுத் துறையில் தகுதி அடிப்படையில் அரசுப் பணிக்கு ஆள் சேர்க்கப்படுகிறதேயன்றி இனங்களுக்கிடையிலான எத்தகைய கோட்டா முறையையும் கடைபிடிக்க வில்லை என்று அவர் சொன்னார். என்ற போதிலும் அரசுத் துறைகளில் புறநகர்ப் பகுதிகளில் வாழும் மக்களுக்கான தகவல்கள் சென்று சேரும் வகையில் வட்டார சந்திப்புக் கூட்டங்களும் விளக்கமளிப்புக் கூட்டங்களும் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 47 நிகழ்ச்சி களையும் 15 சந்திப்புகளையும் நடத்தியுள் ளது. அதே வேளையில் இந்தியர் பணியாளர் சேர்ப்புத் திட்டத்தை மேம்படுத்த அரசாங்கத்துறை உயர்கல்விக் கூடங்களின் உதவிகளையும் நாடி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் பேராக், சுங்கை சிப்புட்டில் பொதுப்பணித்துறை விளக்கமளிப்புக் கூட்டத்தை நடத்தவுள்ள தாக ஸலிஹா தெரிவித்தார்.