ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கும்பமேளாவில் கலந்துகொள்ள காரில் சென்ற எட்டுப் பேர் விபத்தில் உயிரிழந்தனர். ஜெய்ப்பூர்-அஜ்மீர் விரைவுச் சாலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
ஜெய்ப்பூர் நகரில் இருந்து வியாழக்கிழமை (பிப்ரவரி 6) பிற்பகலில் அரசுப் பேருந்து ஒன்று அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அஜ்மீரில் இருந்து எட்டுப் பயணிகளுடன் கார் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் மவுகம்புரா பகுதியருகே சென்றபோது சாலைத் தடுப்பின் அருகே பேருந்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.
அதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் உருக்குலைந்தது.
காரில் பயணம் செய்த எட்டுப் பேரும் பலியானார்கள். இதுதவிர ஆறு பேர் காயமடைந்தனர். இதனை ஜெய்ப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா உறுதி செய்தார்.