தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்

கோலாலம்பூர்:

பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய பத்துமலை வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வழி தாம் கொண்டுள்ள உறுதிபாட்டை புலப்படுத்துகிறது. இந்த வருகையின் போது, அன்வார் இப்ராஹிம் மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, தேவஸ்தான முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களோடு கலந்துரையாடினார்.

தேவஸ்தான செயலவையினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார். ஆலயம் சமூக சேவை மையமாகச் செயல்பட புதிய மண்டபம் கட்டுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு, இரண்டு பெரிய மின்னியல் திரையை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்குத் தாம் வழங்கவிருப்பதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.

இந்த மின்னியல் திரையின் வழி தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள் தொடர்பான காணொலிகளை கண்டுகளிக்கலாம் என்றார் அவர்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியர்களின் நலன் காக்கவும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவும் இலக்கவியல் அமைச்சு மேற்கொள்ளும் முயற்களில் இதுவும் ஒன்றாகும்.

அதோடு இந்திய சமுதாயம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், மின்னியல் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதிவளர்ச்சி காணும் மின்னியல் பொருளாதாரத்தில் இந்தியர்கள் பின் தங்விடக்கூடாது என இலக்கவியல் அமைச்சு கருதுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இன்று பத்துமலையில், பெரும்பாலான சிறு குறு வணிகர்கள் இலக்கவியல் முறையில் தங்களது வணிகத்தை நடத்துவது பாராட்டுக்குறியது. இந்த விழிப்புணர்வு தொடர வேண்டும், இன்னும் அதிகமான இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள இலக்கவியல் வணிகத்திற்கு மாறுவது சிறப்பு.

கடந்த ஆண்டு இலக்கவியல் அமைச்சு, இந்தியர்களின் மேம்பாட்டுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. ஆலய மேம்பாட்டுப் பணிகள், இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நிதி உதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி என கடந்த ஆண்டு வழங்கியது போலவே, இந்த ஆண்டும் இந்தியர்களுக்கு வழங்கும் என்றார் அவர்.

இந்த ஆண்டு தைப்பூச தினத்தையொட்டி, பத்துமலையில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இலக்கவியல் அமைச்சு அன்னதானம் வழங்கும் என்பதோடு, இவ்வேளையில் நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here