புத்ராஜெயா:
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செத்தியா அலாம் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததை அடுத்து, நாட்டில் உள்ள கடைத்தொகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பாதுகாவல் அதிகாரிகளுக்கும் துணைக் காவல் அதிகாரிகளுக்கும் கூடுதல் பயிற்சி வழங்கப்படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பாதுகாவல் அதிகாரிகளுக்கும் துணைக் காவல் அதிகாரிகளுக்கும் அரச மலேசியக் காவல்துறை பயிற்சி அளித்து வருகிறது. இந்தப் பயிற்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமது அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாக அமைச்சர் சைஃபுதீன் கூறினார்.
வர்த்தக வளாகங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இலக்கு என்று, இன்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) செத்தியா அலாம் கடைத்தொகுதியில் ஆண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது காலிலும் பிட்டத்திலும் காயங்கள் ஏற்பட்டன. வெளிநாட்டு ஊழியரான அந்தத் துப்பரவுப் பணியாளர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் ஷா அலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மலேசியக் காவல்துறையினர் அடையாளம் கண்டுவிட்டதாக கூறப்படுகிறது.