ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவில் 70,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு

ஜோகூர் பாரு:

தைப்பூசத் திருவிழாவுக்காக ஜோகூர் பாரு நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் தயாராகி வருகிறது. நாளை செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் சுமார் 70,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பூசத் திருவிழாவுக்காகத் தயாராகும் பணிகள் பத்து நாள்களுக்கு முன்பு தொடங்கியதாகக் கோயில் தலைவர் என். சண்முகம் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளில் 100லிருந்து 300 பக்தர்கள் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

விரைவு ரயில் சேவை இணைப்பு பணிமனைக்கான கட்டுமானத் தளத்துக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. கட்டுமானப் பணிகளால் அதிக இடையூறு ஏற்படாதிருக்க ஒப்பந்ததாரர்களுடன் கோயில் நிர்வாகம் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்றார் அவர்.

“தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு விரைவு ரயில் சேவைத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 10, பிப்ரவரி 11 என இரண்டு நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படும். அதேநேரம் தைப்பூசத் திருவிழா சுமுகமான முறையில் நடந்தேற காவல்துறை, அரசு சார்பற்ற பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று சண்முகம் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 10) இரவு 10 மணி அளவில் ஜோகூர், ஜாலான் உங்கு புவானில் இருக்கும் அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து கிட்டத்தட்ட 5,000 பக்தர்கள் காவடி ஏந்தி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்குவர் என்றும் அவர் கூறினார்.

அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்துக்கும் வாடி ஹனா வட்டாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கும் இடையிலான ஆறு கிலோமீட்டர் பயணப் பாதையில் பக்தர்கள் காவடிகளை ஏந்திச் செல்வார்கள் என்றும், பயணப்பாதை எங்கும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான இடங்களுக்கும் இருள் சூழ்ந்த இடங்களில் கூடுதல் விளக்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தைப்பூசத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் மற்றும் தொண்டூழியர்களின் உதவியுடன் ஏறத்தாழ 50,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் தயாராகி வருகிறது.

காவல்துறையும் அரசு சார்பற்ற அமைப்புகளும் உணவுப்பொருள்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here