தைப்பூசத் திருநாளை (பினாங்கு தண்ணீர் மலை) அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவிலில் கலந்து கொள்ளவிருக்கிறார் இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங். இலக்கவியல் அமைச்சின் சார்பாக பினாங்கு தண்ணீர்மலை கோவிலில் இலவசமாக மின்னியல் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வழி பக்தர்களும் கோவிலுக்கு வருபவர்களும் தூரத்திலிருந்து ஆலயத்தில் நடைபெறும் பூஜை புனஸ்காரங்களையும் நிகழ்ச்சிகளையும் காண இயலும்.
தைப்பூசம் என்பது, நமது நாட்டில் இந்து சமய விழா மட்டும் அல்ல. அனைத்து இந்தியர்களும் கொண்டாடும் ஒரு மாபெரும் கொண்டாட்டமாகவும் திகழ்கிறது. புலம்பெயர்ந்த இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர், மியன்மார், அமெரிக்கா, இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா, செஷெல்ஸ், ரியூனியன், மொரிஷியஸ் என பல நாடுகளில் கொண்டாடப்பட்டாலும், மலேசியாவில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாதான் உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மலேசியா, ஒரு தனி நாட்டில் நடைபெறும் சமய விழாவை உலகம் கண்டு வியக்கவும், இரசிக்கவும் துணைபுரிவது இலக்கவியல் தகவல் தொழில்நுட்பம் தான்.
தைப்பூச நன்னாளில் கோவிலுக்குச் சென்று தரிசிக்க இயலாதவர்கள் நாட்டிலுள்ள இலக்கவியல் கட்டமைப்பு தொழில் நுட்பத்தின் துணையால், இருந்த இடத்திலேயே ஆலய தரிசனத்தைக் கண்டு மகிழலாம். அதோடு பலர், தங்களது வட்டாரத்தில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களையும், அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் சமூக வலைத்தலங்களில் பதிவேற்றுகின்றனர். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நடைபெறும் தைப்பூச விழாவின் பேரலை சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது.
மக்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவது, பிறருக்கு உதவுவது, நாட்டிலுள்ள கோவில்களின் சிறப்பை பதிவு செய்வது, ஒற்றுமையாக வழிபாட்டை மேற்கொள்வது, சமூகத்துக் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல காணொளிகள் மக்கள் பதிவிடுவது நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப இலக்கவியல் வசதிகளால்தான்.
இந்திய சமுதாயம், தங்களது சமய பெருவிழாவை நேர்த்தியுடனும் சிறப்பாகவும் கொண்டாடுவதும், அவர்களோடு இணைந்து இந்தக் கொண்டாட்டத்தில் தாம் பங்குகொள்வதும், தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார். அதோடு, இலக்கவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை இது போன்ற நற்காரியங்களுக்கு முறையாகவும், பண்பாகவும் இந்தியர்கள் பயன்படுத்துவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று அவர் பதிவு செய்தார். சமய நெறியுடன் தைப்புசத் திருநாளை கொண்டாடும் இந்து பெருமக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ.