ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
சமூக ஊடகமான Blind தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப நிகழ்வுகளை அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தன என்று பகிர்ந்துள்ளார். தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன். நிறுவனத்தின் ஐரோப்பா – ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் என் மீட்டிங்- கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைகின்றன.
என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும்போது, மீட்டிங்கில் இருந்த பிரச்சனையால் அவளை உடன் இருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள்.
இன்று எனது பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.
என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தெரிவித்துள்ளார்.