சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் உள்ள ரமலான் சந்தை வியாபாரிகள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களின் கடைகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் இந்த விதியை மீறும் வணிகர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் மாநிலத்தில் உள்ள ரமலான் சந்தைகளில் செயல்பட தடை விதிக்கப்படும் என்றும் மாநில உள்ளாட்சி, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் குழுத் தலைவர் ஜே.அருள் குமார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நிபந்தனைகள் பின்பற்றப்படாவிட்டால் உள்ளூர் அதிகாரிகள் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்ய தயங்க மாட்டார்கள் என்றும், ரமலான் பசார் என்பது வெளிநாட்டினருக்கானது அல்ல, உள்ளூர் வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் நீலாய் மாநில சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமார் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மூன்றாம் தரப்புக்கு கடைகளை வாடகைக்கு விடும் தரப்புக்கு எதிராக சம்மன் அனுப்பப்படும் என்று சிரம்பான் நகர மேயர் டத்தோ மஸ்ரி ரஸாலி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.