ஒட்டு மொத்த மலேசிய மக்களுக்கும் ஆன்லைன் பயனீட்டு பாதுகாப்பை மடானி அரசாங்கம் பலப்படுத்தி இருக்கிறது. அதேசமயம் அனைவருக்கும் உகந்த, பாதுகாப்பு மிக்க டிஜிட்டல் வசதிகளையும் உறுதி செய்திருக்கிறது.
இதன் தொடர்பில் மடானி அரசாங்கம் 2025 இன்டர்நெட் பாதுகாப்பு தினம் என்ற ஒரு மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் (எம்சிஎம்சி) வழி Jelajah Kempen Keselamatan Dalam Talian எனும் ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடர்பு அமைச்சு தொடங்கி இருக்கிறது.
இப்பிரச்சாரமானது நாடு முழுவதும் உள்ள 10,000 பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும். இன்டர்நெட் பாதுகாப்பு எந்த அளவுக்கு அவசியம், முக்கியம் என்பது குறித்து அனைத்து நிலைகளையும் சேர்ந்த மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த பிரச்சாரத்தின் தலையாய நோக்கமாகும்.
மூன்று முக்கிய அம்சங்களில் இந்த பிரச்சாரம் அதீத கவனம் செலுத்தும்:
● 13 வயதிற்கு கீழ்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் சொந்தமாக கணக்கு வைத்திருக்க முடியாது. (பெற்றோர் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்)
● ஆன்லைன் மோசடி (ஸ்கேம்), ஆன்லைன் சூதாட்டம், இணைய பகடிவதை, சிறார் ஆபாச படங்கள் போன்ற கொடிய வலைகளில் சிக்காமல் இருப்பதற்கும் விடுபடுவதற்கும் ஊக்குவித்து விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது
● உயர்நெறி, உயர் பாதுகாப்பு இன்டர்நெட் பயனீட்டை ஊக்குவித்தல்
ஆன்லைன் அச்சுறுத்தல், மிரட்டல்கள் போன்றவற்றில் இருந்து சிறார்கள் முதல் குடும்பங்கள் வரை அனைத்து மலேசியர்களுக்கும் உச்சபட்ச பாதுகாப்பை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்கிறது. இந்நிலையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பொது மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று மடானி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இதன் தொடர்பில் சில நிபுணர்களின் கருத்துக்களை மக்கள் ஓசை கேட்டறிந்தது. அவர்கள் என்ன சொல்கிறார்கள்; என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்…
கஸ்தூரி பாய் முனுசாமி நாயுடு
மேஜர் பெர்செக்குத்து கஸ்தூரி பாய் முனுசாமி நாயுடு லைசென்ஸ் பெற்ற மன நல ஆலோசகர், மலேசிய மனநல ஆலோசகர் மன்றத்தில் பதிவு பெற்றிருப்பவர்.


1998 தொடர்பு, பல்லூடக சட்டத் திருத்தம் தேவை – அவசியம் அறிந்து மிகச் சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது 13 வயதிற்கு கீழ்பட்ட சிறார்கள் சொந்தமாக சமூக ஊடக கணக்குகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தான். பெற்றோர் அல்லது பாதுகாவலர் நேரடிப் பார்வையில் தான் அவர்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும் என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
13 – 14 வயதிற்குட்பட்ட பதின்ம வயது சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்டர்நெட் பயனீட்டில் ஈடுபடுகின்றனர். முழுக் கவனமும் அதில் நிலைக்குத்தி மூழ்கிக் கிடக்கின்றன ர். நாளடைவில் அதற்கு அடிமையாகும் விபரீதத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதனை சரியான முறையில் கட்டுப்படுத்த தவறினால் பல்வேறு எதிர்மறை மேலும் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தீயவற்றின் மீது அவர்களின் முழுக்கவனமும் நிலைக்குத்திவிடும். பொதுவாகவே இணைய பகடி வதைகளால் அவர்களின் பிஞ்சு மனம் அதிகமாகவே காயப்படுகிறது. மன உளைச்சலும் மனச் சிதைவும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆணி அடித்து இளம் தலைமுறையை மீட்டெடுப்பதற்கு புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்புதிய சட்டத் திருத்தமானது குற்றமிழைப்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவதற்கு வகைசெய்கிறது. மேலும் இப்புதிய சட்டத் திருத்தத்தின் வழி சிறார்கள், பதின்ம வயதினர் ஆகியோரை மனநலம் பாதிப்பு, மனச் சிதைவு, தனிமையில் முடங்கிப் போகுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
பாதிக்கப்படும் சிறார்களையும் பதின்ம வயதினரையும் இக்கொடிய வலையில் இருந்து மீட்டு முழுமையாக விடுவிப்பதற்கு என்னென்ன வழிகள், நடவடிக்கைகள் என்பதை தெளிவுப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடானி அரசாங்கம் வடிவமைத்துள்ளது.
ஒரு பிள்ளையின் மனநலம் பாதிக்கப்படும் போது படிப்பில் கவனச் சிதைவு, உடன்பிறப்புகள்-குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமின்றி விலகி இருக்கும் மனப்போக்கு, மன அழுத்தம், பயம் போன்றவற்றால் நிலைகுலைந்து போவது, தூக்கமின்மை, பசியின்மை, நரம்பு தளர்ச்சி பாதிப்பால் அவதியுற்று இயல்பு வாழ்க்கையை தொலைக்கும் சூழல் ஏற்படுகிறது.
இக்கொடிய நிலையில் இருந்து சிறார்களை மீட்டெடுத்து ஆரோக்கியமான வாழ்வியல் சுற்றுச்சூழலை இப்புதிய சட்டத்திருத்தம் ஏற்படுத்தித் தருகிறது. ஆபத்துகள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றிலிருந்து சிறார்களையும் பதின்ம வயதினரையும் காக்கும் ஓர் அரணாக இச்சட்டத் திருத்தம் விளங்குகிறது.
கெட்ட, தீயச் செய்திகளால், பாலியல் தொடர்பான படங்கள் போன்றவற்றின் பக்கம் இவர்களின் கவனம் திரும்பாமல் இருப்பதையும் தடுப்பதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது.
அதேசமயத்தில் பெற்றோர், பாதுகாவலர் கண்காணிப்பில் இவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது கல்வி சார்ந்த பாடங்கள், ஆரோக்கியமான தகவல்களில் பிள்ளைகளின் கவனம் திரும்பும். இன்டர்நெட் மோகமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
தீய சகவாசத்தால் சிறார் தற்கொலை முயற்சிகளும் முற்றாக தடுக்கப்படும். இன்டர்நெட்டை தொடர்ச்சியாக பார்ப்பதால் ஏற்படக்கூடிய கண்பார்வை பாதிப்பும் முடங்கிக் கிடக்கும் போக்கும் உடல்நிலை பாதிப்பும் தவிர்க்கப்படும்.
இப்புதிய சட்டத்திருத்தத்தின் வழி இன்டர்நெட் பயனீட்டில் உச்சபட்ச பாதுகாப்பை அமல்படுத்தி இருக்கும் மடானி அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
லோகநாதன் வீராசாமி
மலேசிய உயர்நெறி கழகம் முன்னாள் துணை இயக்குனர் லோகநாதன் வீராசாமி பார்வையில் 2025 இன்டர்நெட் பாதுகாப்பு தினம்…


மடானி அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் 2025 இன்டர்நெட் பாதுகாப்பு தினம் பயனீட்டாளர்களுக்கு திறந்த – சிறந்த பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை தருவதாக உள்ளது. இதன் மூலம் அனைத்து நிலைகளையும் சேர்ந்த மலேசியர்கள் மிகவும் பாதுகாப்பாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல.
சிறார்கள், பதின்ம வயதினர் இன்டர்நெட்டை உயர்நெறியில் பயன்படுத்தக் கூடிய ஆற்றலையும் தெளிவையும் அதிகரிக்கக்கூடிய ஒரு சிறந்த முன்னெடுப்பு ஆகும். சிறார் முதல் வயோதிகர் வரை ஆண் – பெண் இரு பாலரும் இன்றைய சூழலில் இன்டர்நெட் பயனீட்டை தங்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே வைத்துள்ளனர்.
நல்ல செய்திகளையும் தகவல்களையும் இன்டர்நெட் கொண்டிருந்தாலும் தீய அம்சங்கள் அடங்கிய கெட்ட செய்திகளும் அவற்றோடு ஒட்டிக்கொண்டு வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.
மாணவர்களும் பதின்ம வயதினரும் இன்டர்நெட்டில் மூழ்கிக் கிடக்கின்றன ர். இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டு மனச் சிதைவில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.
இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இலவச தொடர்பு இணைப்புகள் போலியானவை, நாசம் செய்யக்கூடியவை என்று தெரிந்திருந்தும் அவற்றில் சிக்கிக்கொள்கின்றனர் சிறார்கள். உயர்நெறிகளையும் பண்புகளையும் மனநலத்தையும் கட்டொழுங்கையும் பாதிக்கக்கூடிய அம்சங்கள் இவர்களின் வாழ்க்கையை சீரழிந்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த இளைய தலைமுறையினரை மீட்டெடுத்து ஓர் ஆரோக்கியமான மலேசிய சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கத்தில் மடானி அரசாங்கம் இந்த 2025 இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தை அறிமுகம் செய்திருப்பது நாட்டு மக்களின் நலனில் மடானி அரசாங்கம் கொண்டிருக்கும் அதீத அக்கறையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான மலேசிய சமுதாயத்தை உருவாக்கிடும் தலையாய நோக்கத்தையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இப்பிரச்சாரத்தின் மூலம் மாணவர் சமுதாயம் இன்டர்நெட்டை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி வளமிக்க மலேசியாவை உருவாக்கும் இலக்கும் நனவாகும்.
கட்டுப்பாடு, கண்காணிப்பு இல்லாத இன்டர்நெட் பயனீடு எவ்வளவு கொடியது, ஆபத்தானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் களமாக 2025 இன்டர்நெட் பாதுகாப்பு தினம் திகழும் என்பதில் ஜயமில்லை.
சரியான புரிதலும் தெளிவும் இருந்தால் தான் நாளைய தலைமுறையே சிறார்கள் தான் என்ற உண்மையும் அவர்களின் சிந்தனையில் ஆழமாக விதைக்கப்படும்.
இளைய தலைமுறையின் நல்வாழ்வுக்கு மிகச் சரியான நேரத்தில் இப்படியொரு சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி இருக்கும் மடானி அரசாங்கத்திற்கு நன்றி சொல்வதற்கு நாட்டு மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.