அரையிறுதியில் என்ன நடக்கப்போகிறது?

2011 உலகக்கோப்பை அது. காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவுக்குதான் அது அழுத்தமிக்க போட்டி. ஏனெனில், 2007 உலகக்கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று முதல் சுற்றோடு வெளியேறியிருந்தது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 முறை உலகக்கோப்பையை வென்றிருந்தது. ரிக்கி பாண்டிங் தனக்கென தனி சகாப்தத்தை எழுதியிருந்தார். தோனி இளம் கேப்டன்.

நிலைமை இப்படியிருக்க இந்திய முகாம் என்ன மனநிலையில் இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்களேன். முடிந்தவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவே கூடாது, அப்படியே எதிர்கொண்டாலும் தொடரின் கடைசியில் எதிர்கொள்ள வேண்டும். ஆபத்தை முடிந்த வரை தள்ளிப்போடும் எண்ணம் இது. நியாயப்படி இப்படித்தானே நினைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி வேறுமாதிரியாக யோசித்தது.

அதாவது, ஆஸ்திரேலியாவை எவ்வளவு சீக்கிரமாக எதிர்கொண்டு தொடரை விட்டு வெளியே அனுப்புகிறமோ அவ்வளவு நல்லது என இந்திய அணி நினைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை ஒரு இறுதிப்போட்டியில் எதிர்கொள்வதை விட காலிறுதிப்போட்டியில் எதிர்கொண்டு அங்கேயே அவர்களை வெளியில் அனுப்பி விடுவதுதான், நாம் கோப்பையை வெல்ல சரியாக இருக்குமென திட்டமிட்டனர். அதனாலயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலிறுதிப்போட்டி வந்ததை இந்திய அணி ரொம்பவே விரும்பியது. இதை அஷ்வின் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பார்.

ஐ.சி.சி தொடரின் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட ஆஸ்திரேலிய அணி ஒரு Beast ஐ போல மாறிக்கொண்டிருக்கும். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது பெரும் சவாலாக இருக்கும். 2003 உலகக்கோப்பை நியாபகம் இருக்கிறதல்லவா? கங்குலி தலைமையிலான இந்திய அணி அத்தனை சிறப்பாக ஆடியும் ஒன்றும் செய்ய முடியவில்லையே. அதேதான் 2007 இல் இலங்கைக்கும். 2015 இல் நியூசிலாந்துக்கும்.அந்த 2015 உலகக்கோப்பையிலெல்லாம் நியூசிலாந்துதான் Talk of the Town. மெக்கல்லமின் கேப்டன்சியில் துடிப்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர்.

இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிவிட்டதால் இந்திய ரசிகர்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றெல்லாம் மெக்கல்லம் கேட்டிருந்தார். அதேமாதிரி, நியூசிலாந்துக்கு பெரிய ஆதரவும் இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா முன்பு எதுவும் பலிக்கவில்லை. மிக எளிதாக அந்த இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியா வென்று சென்றது. 2023 உலகக்கோப்பையை மறக்க முடியுமா? ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.

ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் லீக் போட்டியிலேயே இந்தியாவிடம் வீழ்ந்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவே குரங்கு பெடல் அடித்துதான் வென்றிருந்தனர். இந்திய அணி இருந்த ஃபார்முக்கு இந்த முறை கட்டாயம் வெல்வார்கள் என்றே தோன்றியது. ஆனால், பேட் கம்மின்ஸ் சொன்னதைப் போலவே ஒட்டுமொத்த இந்தியாவையும் அமைதியாக்கிவிட்டார்.

அரையிறுதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்றவுடன், ‘ஐ.சி.சி தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்கென ஒரு வளமையான பாரம்பரியம் இருக்கிறது.’ என ரோஹித் பேசியிருந்தார். ரோஹித் சொன்ன வளமையான பாரம்பரியம் மேலே குறிப்பிட்டதுதான். ஐ.சி.சி தொடர்களின் நாக் அவுட்ஸில் ஆஸ்திரேலியா எப்போதுமே 10x பலத்துடன் இருக்கும். இப்போது வந்திருப்பது இரண்டாம் கட்ட அணிதான். ஆனால், இவர்களுக்கும் அது பொருந்தும். இந்த அணியை வைத்துக் கொண்டுதான் இங்கிலாந்துக்கு எதிராக 350+ சேஸிங்கை செய்து முடித்தார்கள். இந்த அணியை வைத்துக் கொண்டுதான் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள். ஆக, ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிடவே முடியாது.

‘அரையிறுதி என்பதால் இரு அணிகளுக்குமே அழுத்தம் இருக்கத்தான் செய்யும். நாங்கள் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி யோசிப்பதைவிட, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் யோசிக்க நினைக்கிறோம்.’ என ரோஹித் கூறியிருக்கிறார்.

‘எங்களிடம் கொஞ்சம் அனுபவமில்லாத அணிதான் இருக்கிறது. ஆனால், இது இவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. சர்வதேச அளவில் ஒரு பெரிய தொடரில் இதுவரை சிறப்பாகவே ஆடியிருக்கின்றனர். இந்த அரையிறுதியிலும் சிறப்பாக ஆடி மற்றுமொரு இறுதிப்போட்டியில் ஆடுவோம் என நம்புகிறேன்.’ என போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்மித் பேசியிருக்கிறார்.ஸ்பின்தான் வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி முடிவாகும் எனவும் ஸ்மித் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இப்போதைய நிலைமை இதுதான். இந்திய அணி கடைசிப் போட்டியில் நான்கு ஸ்பின்னர்களோடு ஆடியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஷம்பா என்கிற ஒரே ஒரு முழு நேர ஸ்பின்னரைத்தான் வைத்திருக்கிறது. அவரோடு மேக்ஸ்வெல்லும் லபுஷேனும் ஒத்துழைப்பார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு மிடிலில் உள்ள அந்த 30 ஓவர்களுமே பிரச்னையாக இருக்கும். அதேநேரத்தில் ஏற்கெனவே லெக் ஸ்பின்னுக்கு வீக்காக இருக்கும் இந்திய அணி ஷம்பாவின் 10 ஓவர்களையும் பார்த்துதான் ஆட வேண்டும்.

இந்திய அணியைவிட ரோஹித்துக்கு இந்த வெற்றி ரொம்பவே முக்கியம். 2027 உலகக்கோப்பை வரை ஆட வேண்டும் என்பதே அவரின் விருப்பம். அதற்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றே ஆக வேண்டும். அப்போதுதான் அவர் விரும்பும் வகையில் 2027 வரை ஆட முடியும்.

ரோஹித்தின் எதிர்காலமும் ஆஸ்திரேலியாவின் கையில்தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here