சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி விரதத்தை தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர். விநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களை தரக்கூடியது. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அதாவது, துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களும் தேய்ந்து போகும் என்பது நம்பிக்கை.

அதிலும் வைகாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

சங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் :

சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதன் மூலம் அனைத்து விதமான துன்பங்களும், தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் சஷ்டியில் விரதம் இருப்பார்கள். அது போல வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும். வழிபாட்டிற்கும், விரதம் இருந்து இறைவனின் அருளை பெறுவதற்கும் ஏற்ற மாதமான வைகாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் என்ன கோரிக்கையை முன் வைத்து விநாயகப் பெருமானிடம் வேண்டி வழிபட்டாலும் அது அப்படியே நடக்கும். நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவதுடன், விநாயகப் பெருமானே நமக்க துணையாக இருந்து வழிகாட்டுவார் என சொல்லப்படுகிறது.

வழிபடும்முறை:

– சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
– முழு நேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
– அன்று முழுவதும் விநாயகருக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்.
– சதுர்த்தியன்று மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.
– விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானதாகும்.
– அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியின் மகிமை:

– ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர்.
– சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகளையும், தோஷங்களையும் போக்கக்கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
– விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கடஹர சதுர்த்தி விரதம், அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
– அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்ததும், அகலிகை கௌதமரை அடைந்ததும், பாண்டவர்கள் துரியோதனனை வென்றதும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால் தான்.

விரதத்தின் பலன்கள்:

– மன அமைதியும் சந்தோஷமும் பெருகும்.
– அறிவும் ஞானமும் வளரும்.
– குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்.
– அனைத்து விதமான கஷ்டங்கள் மற்றும் தடைகள் விலகும்.
– நினைத்த காரியம் கைகூடும்.
– வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள்.
– சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல நோய்களும் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here