இலக்கவியல் (டிஜிட்டல்) உள்ளடக்கத்தின் வழி நாடு பன்மடங்கு வருமானம் ஈட்ட சீன பெரு நிறுவத்துடனானஒத்துழைப்பு வழி கோலும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
மலேசிய இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம் மற்றும் சீனா இன்டர்நேஷனல் கேபிடல் கார்ப்பரேஷன் (CICC) காப்பிடல் மானேஜ்மெண்ட் கம்பனி (CICC Capital) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், “சீனா-மலேசியா கேம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க நிதி” என்ற USD100 மில்லியன் அளவிலான நிதி உருவாக்கப்பட உள்ளது என கோபிந்த் தெரிவித்தார்.
2011 முதல் 2023 வரை மலேசியாவின் டிஜிட்டல் உள்ளடக்கத் துறையின் மொத்த வருமானம் RM87.25 பில்லியன், ஏற்றுமதி RM11.18 பில்லியன் மற்றும் முதலீடுகள் RM80.26 பில்லியன் என பதிவாகியுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்தத் இலக்கவியல் உள்ளடக்கத் துறை 2023 ஆம் ஆண்டில் 8,200 வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 300க்கும் மேற்பட்ட இலக்கவியல் உள்ளடக்க நிறுவனங்களை கொண்டுள்ளது. மேலும், இந்தத் துறை 2023 ஆம் ஆண்டில் RM1.4 பில்லியன் அளவிலான உள்ளூர் உற்பத்தி மதிப்பை (GDP) பதிவு செய்துள்ளது.
மலேசியாவின் உள்ளூர் உள்ளடக்க நிறுவனங்கள், 7th Beat Games (Rhythm Doctor), Upin & Ipin, Ejen Ali, Mechamato, மற்றும் Didi & Friends போன்ற உலகளாவிய அளவில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி, நாட்டின் படைப்பாற்றலை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வளர்ச்சி, மலேசியாவின் டிஜிட்டல் உள்ளடக்கத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
நமது உள்ளூர் படைப்பாற்றல் கொண்ட டிஜிட்டல் உள்ளடக்க நிறுவனங்கள் உலகளாவிய புகழ்பெற்றவையாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 7th Beat Games, “Rhythm Doctor” என்ற வீடியோ விளையாட்டிற்காக, 2024 ஆம் ஆண்டின் Independent Games Festival (IGF) விருது விழாவில், “Excellence in Audio” பிரிவில் மலேசியா வெற்றி பெற்றது. இந்த விளையாட்டு, ஒரு பட்டன் ரிதம் கேம் ஆகும், இதில் வீரர், நோயாளிகளின் இதயதுடிப்புகளுக்கு ஏற்ப, இடைவேளையில் தட்டச்சு செய்து, அவர்களை குணப்படுத்த வேண்டும். இந்த விளையாட்டின் இசை வடிவமைப்பு, அதன் தனித்துவமான மற்றும் சவாலான மெட்டு அமைப்புகளூக்காகப்பாராட்டப்பட்டது.
மேலும், “Upin & Ipin“, “Ejen Ali”, “Mechamato“, மற்றும் “Didi & Friends” போன்ற மலேசிய அனிமேஷன் தொடர்கள், உலகளாவிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. “Ejen Ali” தொடர், 27வது ஆசிய தொலைக்காட்சி விருதுகளில் “Best 3D Animated Series” விருதை வென்றது. “Mechamato the Movie” திரைப்படம், 2022 ஆம் ஆண்டில் RM36 மில்லியன் வரை வசூல் செய்தது, இது அதன் உலகளாவிய வரவேற்பை புலப்படுத்துகிறது.
மேலும், “Passion Republic” மற்றும் “Glow Production” போன்ற மலேசிய கேம் ஸ்டுடியோக்கள், “Spider-Man Remastered”, “Baldur’s Gate 3”, மற்றும் “Elden Ring” போன்ற பிரபலமான விளையாட்டுகளுக்கு உயர் தரமான கலை வடிவமைப்பு மற்றும் கூட்டாக மேம்படுத்தும்திறன்களை வழங்கி, உலகளாவிய கேம் துறையில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.
இந்த வளர்ச்சி, மலேசியாவின் டிஜிட்டல் உள்ளடக்கத் துறை உலகளாவிய ரீதியில் கோலோச்சுவதை புலப்படுத்துவதாக உள்ளது என கோபிந்த் சிங் புகழாரம் சூட்டினார்.











