கோலாலம்பூர்:
உயர் ரக, விலை அதிகமுள்ள டுரியான்கள் வரிசையில் ‘துப்பாய் கிங்’ முதலிடம் பிடிக்க இருக்கிறது.
மலாய் மொழியில் துப்பாய் என்றால் அணில் என்று பொருள். தற்போதைய நிலவரப்படி ‘முசாங் கிங்’, ‘பிலாக் தோர்ன்’ போன்ற டுரியான் வகைகளைப் போல பிரபலமாக இல்லாதபோதிலும் ‘துப்பாய் கிங்’ அசாத்திய சுவையைக் கொண்டது என்றார் விவசாயியான சியூ சீ வான்.
“கசப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் கடலை வகைகளின் சுவையும் அதற்கு உள்ளது. இவ்வகை டுரியானை முதன்முதலாகச் சாப்பிட்டுப் பார்த்தபோது அது பிரபலமடையும் என்பதை உணர்ந்தேன்,” என்று சியூ கூறினார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள சுங்கை ஆராவில் துப்பாய் டுரியானை அவர் ருசி பார்த்தாராம். அதன்பின்னர் “துப்பாய் கிங் டுரியான் மரங்களை வளர்ப்பது குறித்து மற்ற விவசாயிகளிடம் பேசினேன்” என்றார்.
‘மூசாங் கிங்’, ‘பிலாக் தோர்ன்’ போன்ற டுரியான்கள் பிரபலமாக இருந்து ஆதிக்கம் செலுத்தியதால் பலர் தயங்கினர். இன்று துப்பாய் கிங் வகை டுரியான் அதிக அளவில் இல்லை. அத்துடன் அதன் சுவை தனித்தன்மை வாய்ந்தது. எனவே, அது அதிகம் தேடப்பட்டு வரும் டுரியான் வகையாக தற்போது உள்ளது.
“நல்ல வேளையாக அதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன். தற்போது எனது பண்ணையில் ஏறத்தாழ 50 துப்பாங் கிங் மரங்கள் உள்ளன,” என்று சியூ கூறினார்.
மூசாங் கிங்கின் விலை கிலோவுக்கு 80 ரிங்கிட். பிலாக் தோர்னின் விலை கிலோவுக்கு 90 ரிங்கிட். துப்பாய் கிங்கை ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதன் விலை கிலோவுக்கு 250 ரிங்கிட் வரை உயரக்கூடும் என்றார் அவர்.