ஜோகூர் பாரு:
பெர்மாஸ் ஜெயாவில் இரண்டு தொடக்கப் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 42 வயது பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய மாணவிகளை, பெர்மாஸ் ஜெயாவில் உள்ள பள்ளியில் விட்டுச் செல்வதற்கு முன்பு, அந்த நபர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று ஜோகூர் பாரு தெற்கு காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் தாய் நேற்று காலை 11.15 மணிக்கு தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இது தொடர்பில் புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து, நேற்று இரவு 9.50 மணியளவில் பிளென்டாங்கில் உள்ள அவரது வீட்டில் சந்தேக நபரை போலீஸ் கைது செய்தது,” என்று அவர் இன்று ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர், மேலும் அவர்களுக்கு எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(a) இன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரை ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.